வேம்பற்றூர்க் குமரனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வேம்பற்றூர்க் குமரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவை அகநானூறு 157, புறநானூறு 317.

அகம் 157 சொல்லும் செய்தி

திணை - பாலை

பிரிவைத் தாங்கிக்கொள்ளக்கூடியவர்க்கு அவர் தன் பிரிவைச் சொல்லட்டும். என்னிடம் சொன்னால் அது என் நெஞ்சைத் தின்றுவிடும், என்கிறாள் தலைவி.

அரியல்

இதனைப் புலவர் 'அரி(முத்து) நிறக் கலுழி' என்று குறிப்பிடுகிறார். அகன்ற வாயுடைய பானையில் பாளை சுரக்கும் நீர் அது என்றும் அதனை விவரிக்கிறார்.

அரியற் பெண்டிர்

அரியல் விற்பவர்கள் அரியல் பெண்டிர். அரியலை அவர்கள் அளந்து ஊற்றி விற்பார்களாம்.

செங்கண் ஆடவர்

அரியல் பெண்டிரிடம் அரியலை வாங்கி வேண்டிய அளவு குடித்துவிட்டு போரை விரும்பிச் செங்கண் ஆடவர் எதிரொலி கேட்கும்படி ஆரவாரம் செய்வார்களாம்.

பதுக்கை

செங்கண் ஆடவர் வில் எய்வர் என்று வழிச்செல்வோர் பதுங்கிக்கொள்ளும் கல்லடுக்குச் சுவர் பதுக்கை எனப்படும். அவ்விடங்களில் பதுங்கினாலும் அம்பு பாய்ந்து வீழ்ந்தவர்கள் பலராம்.

கோங்கு

அந்தப் பதுக்கைகளில் கோங்க மரங்கள் வளர்ந்திருக்குமாம்.

அதிரல்

அந்தக் கோங்க மரங்களில் அதிரல் கொடி படர்ந்திருக்குமாம்.

கானயானை

அந்த அதிரல் கொடியைப் பூவோடு வளைத்துக் காலை வேளையில் கானயானைகள் மேயுமாம்.

அருஞ்சுரம்

இப்படிப்பட்ட கடத்தற்கு அரிய சுரத்தில் தலைவன் பொருள் தேடச் செல்கிறானாம்.

அதனால் தலைவி கலங்குகிறாளாம்.
வினையழி பாவை

போர்முனையில் வீழ்ந்தோருக்கு அவர்கள் போரிட்ட மன்றத்தில் பாவைப்பொம்மை செய்து வைப்பார்களாம். அந்தப் பொம்மை மழையில் கரைந்தும் வெயிலில் காய்ந்தும் செயத அதன் அழகு அழிந்துபோகுமாம். இதுதான் வினையழி பாவை. (கல்லில் பெரும் பீடும் எழுதி வைத்தால் அது நடுகல் எனப்படும். மண்ணில் உருவாரம் செய்து வைத்தால் அது பாவை எனப்படும்.)

இந்த வியழி பாவை போல் அழகு அழிந்து நான் மனையிலேயை வாழமாட்டேன், என்கிறாள் தலைவி.

புறம் 317 சொல்லும் செய்தி

இந்தப் பாடலின் அடிகள் சிதைந்துள்ளன.
  • துறை - வல்லாண்முல்லை

வலிமை மிக்க ஆண்மகன் ஒருவனைப்பற்றி இந்தப் பாடல் சொல்கிறது.

பெருங் களிப்போடு அவன் முற்றத்தில் விழுந்து கிடக்கிறான். எமக்கும்(பாடும் புலவர்க்கும்), பிறருக்கும், யார்க்கும் உதவும்படி தன்னைக் கொடுத்துவிட்டுத் துயில்கொண்டுள்ளான். தோல்படுக்கை இருந்தாலும், பாய் இருந்தாலும், இல்லை வேறு ஏதாவது படுக்கை இருந்தாலும் அவனுக்குக் கொடுங்கள், என்கிறார் புலவர்.