எருதுகளி
எருதுகளி (Eruthukali) என்பது இந்தியாவின் கேரளத்தின் வடக்கு மலபார் பகுதியில் பிரபலமான ஒரு நாட்டுப்புறக் கலை ஆகும். இது மாவிலார் சமூகத்தினரால் நிகழ்த்தப்படும் நாட்டுப்புறக் கலை வடிவமாகும்.
எருதுகளி நடனம் | |
| பூர்வீக பெயர் | എരുതുകളി (மலையாளம்) |
|---|---|
| வகை | சடங்கு |
| கருவி(கள்) | செண்டை, செம்பிலா |
| தோற்றம் | வடக்கு மலபார், இந்தியா |
கண்ணோட்டம்
எருதுகளி என்பது இந்தியாவின் கேரளத்தின் வடக்கு மலபார் பகுதியில் பிரபலமான ஒரு நாட்டுப்புறக் கலையாகும். இது காசர்கோடு, கண்ணூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் வாழும் மாவிலார் சமூகத்தினரால் கடைப்பிடிக்கப்படும் ஒரு கலை வடிவமாகும். இது மலையாள மாதமான கொல்ல ஆண்டின் பத்தாம் நாளில் மாவிலார் மக்கள் தங்கள் கிராமப் பகுதியில் நிகழ்த்துகின்றனர்.[1]
வரும் ஆண்டுகளில் அனைவருக்கும் வேளாண்மை செழிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையாக எருதுகளி நடனம் நிகழ்த்தப்படுகிறது.[1]
சொற்பிறப்பியல்
'எருது' என்ற சொல்லுக்குப் பெரிய காளை என்று பொருள்.[1] 'காளி' என்றால் விளையாட்டு அல்லது நடனம் என்று பொருள்படும். எருதுகளியின் முக்கிய கதாபாத்திரம் எடுப்புக்காளை (போலி காளை), மூங்கில் குச்சிகள், வைக்கோல், துணி மற்றும் மரத் தலையால் ஆன ஒரு பெரிய காளை ஆகும்.[1]
கட்டுக்கதை
மாவிலார் மக்களின் மூதாதையர்கள் ஜென்மிகளின் போனம் (காடுகளைச் சுத்தம் செய்து மலைகளில் நெல் விவசாயம் செய்யும் தொழில்) வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தபோது, இரண்டு பேர் காளைகளை வாங்கச் சாளுவன் குப்பத்திற்கு அனுப்பப்பட்டனர்.[1] காளைகளுடன் திரும்பி வரும் வழியில், சோர்வாக உணர்ந்த அவர்கள் இருவரும், வழியில் ஓய்வெடுத்துத் தூங்கிவிட்டனர். அவர்கள் எழுந்து பார்த்த, காளைகளைக் காணவில்லை. பல இடங்களிலும் தேடியும் பலனில்லை. பிறகு அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் எருதுகளி நடத்துவதாக உறுதி மேற்கொண்டனர்.[1] இதன் பின்னர் காளைகள் திரும்பி வந்ததால், அவர்கள் சொன்னபடி நடனத்தினை மேற்கொள்கின்றனர்.
செயல்பாடு
எருது உடையை அணிவதற்கு முன், கலைஞர்கள் மூதாதையர்களுக்கு அவல், புத்தரிசி, பழங்களால் செய்யப்பட்ட பொரியை படையலாக இட்டு பிரார்த்தனை செய்கிறனர்.[2]
மூங்கில் குச்சிகள், வைக்கோல், துணி, மரத் தலையால் ஆன ஒரு பெரிய காளையைச் சுமந்துகொண்டு, மாவிலர்கள் வீடு வீடாகச் சென்று, தாளத்துடன் ஆட்டுவார்கள்.[3] செண்டை, செம்பிலா போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.[1] இசைக்கருவியின் இசைக்கேற்பப் பாடலுடன் நடனம் ஆடுவார்கள். விவசாயத்தின் தொடக்கத்தைப் பற்றிய பாடல்களைப் பாடுவார்கள்.[1] மலையாள மாதமான துலாம் பத்தாம் நாளில் தொடங்கும் இந்த நாட்டுப்புற நடனம், மூன்றாம் நாளில் புலி காளையைப் பிடிப்பதோடு முடிகிறது.[3]
விவசாய வேலைகளுடன் தொடர்புடைய அனைத்து வீடுகளுக்கும் இக்காளை கொண்டு செல்லப்படுகிறது.[4] நடனமாடும் வீரர்களுக்குக் குடும்பத்தினர் பரிசுகளையும் வழங்குவார்கள்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "ഗോത്ര സ്മൃതികളുണർത്തി എരുതുകളി." keralakaumudi.com (in மலையாளம்). Kerala Kaumudi. Archived from the original on 2023-04-07. Retrieved 2023-04-07.
- ↑ "പാരമ്പര്യത്തിന്റെ നേർക്കാഴ്ചയായി എരുതുകളി". ManoramaOnline (in மலையாளம்). Malayala Manorama. Archived from the original on 2023-04-07. Retrieved 2023-04-07.
- ↑ 3.0 3.1 "എരുതുകളി നിറഞ്ഞാടി". Deshabhimani (in மலையாளம்). Archived from the original on 2023-04-07. Retrieved 2023-04-07.
- ↑ "പത്താമുദയത്തിനെത്തി 'എരുതും മരമീടനും'". keralakaumudi.com. Archived from the original on 2023-04-07. Retrieved 2023-04-07.