சீதாபஹரணம்
| சீதாபஹரணம் | |
|---|---|
| படிமம்:சீதாபஹரணம்.jpg திரைப்பட பாடல் அட்டைப்படம் | |
| இயக்கம் | எம். பி. சுந்தர ராஜன் |
| தயாரிப்பு | ரஞ்சித் புரொடக்சன்சு |
| நடிப்பு | வி. ராமச்சந்திர பாகவதர் ஆர். ராஜா டி. பி. கே. சாஸ்திரி எம். எஸ். ராஜகோபாலன் சரஸ்வதி சீதாலட்சுமி |
| வெளியீடு | சூலை 28, 1939 |
| ஓட்டம் | . |
| நீளம் | 14367 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சீதாபஹரணம் 1939-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஞ்சித் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ராமச்சந்திர பாகவதர், ஆர். ராஜா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] படத்தை இயக்கியவர் எம். பி. சுந்தரராஜன். இப்படம் ரஞ்சித் கம்பனியின் முதல் தமிழ் பேசும் படமாகும். இப்படம் இந்தியா மட்டுமல்லாமல் மலேசியா ராயல் தியேட்டரிலும் ஓடியது.[2] சீதாபஹரணம் என்பதற்கு "சீதையின் கடத்தல்" என்று பொருள்.
கதைச் சுருக்கம்
வைகுண்டத்தில் வாழும் ஸ்ரீமந்நாராயணனிடம் அனைத்து தேவர்களும் சென்று இராவணனும் மற்ற அரக்கர்களும் தருவிக்கும் துன்பங்களைத் தாங்க முடியாமல் முறையிட்டனர். அவர்களின் துயரைக் கேட்ட நாராயணன், தானே பூமியில் அவதரித்து அரக்கர்களை அழிப்பதாக வாக்களித்தார். இந்த வாக்குறுதியின்படி அவர் இராம, இலட்சுமண, பரத, சத்ருக்கன் என்ற நான்கு திருக்குமாரர்களாக அயோத்தியா நகரின் அரசனான தசரத சக்ரவர்த்திக்கு பிறந்தார். பிதுர் வாக்கிய பரிபாலனம் என்னும் கடமையை முன்னிட்டு சீதையுடன் இலட்சுமணரோடு சேர்ந்து தண்டகாரண்யம் சென்று பஞ்சவடியில் மகிழ்ச்சியுடன் வாசம் செய்து வந்தார். இதுவே இந்தக் கதையின் ஆரம்பம்.
பஞ்சவடியில் கோதாவரி நதிக்கரையில் கணவன் மனைவியர் இருக்க வேண்டிய அன்புடன் இராமரும் சீதையும் மகிழ்ச்சியுடன் நேரத்தைக் கழித்து வந்தனர். சரணாகதி அடைந்த ரிஷிகளுக்கு இராமர் பாதுகாப்பு வழங்கினார். ஒரு நாள் இராவணனின் தங்கை சூர்ப்பணகை காட்டில் சுற்றித் திரியும்போது இராமனைக் கண்டு மயங்கினாள். அவனை அடைய வேண்டும் என்று விரும்பிய அவள், தன் அசிங்கமான தோற்றத்தை மாற்றி அழகான காமவல்லி என்ற பெயருடன் இராமனை அணுகினாள். ஏகபத்னி விரதன் என்பதால் இராமன் அவளை இலட்சுமணனிடம் அனுப்பி வைத்தான். இருவருக்கும் இடையில் நகைச்சுவையான வாதங்கள் நடந்தன. கடைசியில் இலட்சுமணன் அவளுடைய மூக்கை அறுத்துவிட்டான். உடனே அவள் தன் உண்மை உருவத்தை எடுத்துக்கொண்டு கரதூஷணன் மற்றும் பிற அரக்கர்களிடம் சென்று முறையிட்டாள். இதைக் கேட்ட அவர்கள் இராமனை எதிர்க்கச் சென்றனர். இராமன் தனியாகவே அவர்கள் அனைவரையும் ஒரு கணத்தில் வதம் செய்துவிட்டான்.
உடனே சூர்ப்பணகை இலங்கைக்கு ஓடி, வீதிகளெல்லாம் அலறிக்கொண்டு அரண்மனைக்குள் சென்று பரமசிவ பக்தனான இராவணன் காலில் விழுந்து தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தெரிவித்தாள். இராவணன் அதன் காரணத்தைக் கேட்டபோது, தான் சீதையைக் கண்டு வியந்து அவனுக்காக அவளைக் கொண்டுவர முயன்றதாகவும், அப்போது இலட்சுமணன் இப்படிச் செய்துவிட்டதாகவும் பொய் சொல்லி இராவணனின் மனதைக் கலைத்துவிட்டாள். சீதையின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட இராவணன் அவளை எப்படியாவது அடைந்து மோட்சத்தை அடைய விரும்பினான். இதற்கு உதவும் பொருட்டு தன் மாமனான மாரீசனிடம் சொன்னான். இராம பாணத்தின் மகிமையை அறிந்த மாரீசன் இராவணனுக்கு பலவிதமான புத்திமதிகளை எடுத்துக் கூறியும் கேளாமல் நிர்பந்தம் செய்த இராவணனுக்குப் பயந்து மாரீசன் வேறு வழியின்றி ஒரு பொன்மானாக மாறி சீதையை மயக்க எண்ணி அவள் ஆசிரமத்திற்கு அருகில் சென்றான். சீதை அந்த மானைக் கண்டு ஆசைப்பட இராமர் அந்த மானைப் பிடிக்கப் போனார். பிறகு என்ன நடந்தது என்பது மீதிக் கதை.
நடிகர்கள்[3]
- கே. ராஜா - இராமர்
- எம். எஸ். ராஜகோபாலன் - இலட்சுமணன்
- வி. ராமசந்திர பாகவதர் - இராவணன்
- டி. பி. கே. சாஸ்திரி - மாரீசன், பிரகஸ்தன்
- சி. பி. எஸ். மணி அய்யர் - கரன்
- குஞ்சு பாகவதர் - ரிஷி
- ஸ்வாமிநாதன் - ரிஷி
- பத்மநாபராவ் - சிஷ்யர்
- ஜம்புநாதன் - சிஷ்யர்
- பி. ஏ. சுப்பையா பிள்ளை - சோதிடர்
- சரஸ்வதி - சீதை
- சீதாலட்சுமி - சூர்ப்பணகை
- ராஜம்மாள் - காமவல்லி
- கனகம் - மண்டோதரி
பாடல்கள்
இப்படத்தில் மொத்தம் 24 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-18. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ "தமிழ் முரசு". Newspaper SG. 2 சனவரி 1940. Retrieved 2025-05-13.
- ↑ "சீதாபஹரணம்". www.tamildigitallibrary.in. Retrieved 2025-05-14.