தமிழ்நாட்டில் உள்ள இனக்குழுக்கள்
தமிழ்நாடு, இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் சென்னை (முன்னர் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது) ஆகும். தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது மற்றும் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் எல்லைகளாக உள்ளது. இது பரப்பளவு அடிப்படையில், இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாகவும், மக்கள் தொகை அடிப்படையில், ஏழாவது மாநிலமாகவும் உள்ளது.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில், தமிழ் மொழி 88.59% முதன்மை மொழியாக பேசப்படுகிறது, அதைத் தொடர்ந்து தெலுங்கு 5.65%, கன்னடம் 2.68%, உருது 1.51%, இந்தி 0.64%, மலையாளம் 0.89%, மராத்தி 0.1% மற்றும் சௌராட்டிரா 0.1% பேர் பேசுகின்றனர்.[1]
தமிழ் மக்கள்
தமிழர்கள், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அவர்கள் தமிழ்நாட்டில், 69 மில்லியன் பேர் உள்ளனர்.
தமிழர்கள் புதுச்சேரி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 89.43% பேரும், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 6.32% பேரும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர், இது நாட்டின் ஐந்தாவது அதிகம் பேசப்படும் மொழியாக அமைகிறது.
தெலுங்கு மக்கள்
தெலுங்கு மக்கள், இந்தியாவின் ஒரு திராவிட இனக்குழுவாகும். இவர்கள் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தெலுங்கு மொழியில், 74 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இது இந்தி மற்றும் பெங்காலிக்குப் பிறகு இந்தியாவில் மூன்றாவது பெரிய பேச்சு மொழியாக உள்ளது.[2] இவர்கள் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். தென்னிந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியும் தெலுங்குதான். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், சிவகாசி, திருவண்ணாமலை, வேலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, தருமபுரி, சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருப்பூர், தேனி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இவை காணப்படுகின்றன.
கன்னட மக்கள்
கன்னடம் என்பது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். கன்னட மொழி பேசுபவர்கள், தமிழ்நாட்டின் வடமேற்கில் அமைந்துள்ள கருநாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
தமிழ்நாட்டில் கன்னடம் மூன்றாவது அதிகமாகப் பேசப்படும் மொழியாகும், அதைத் தொடர்ந்து 2.8%, தமிழ்நாட்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கன்னடர்கள் உள்ளனர். கர்நாடகாவிலிருந்து சமீபத்தில் குடியேறியவர்கள் கன்னடம் பேசுகிறார்கள், அதே நேரத்தில், ஆதிகாலத்தில் குடியேறிவர்கள் கன்னடம் மற்றும் தமிழ் இரண்டிலும் இருமொழி பேசுகிறார்கள்.
7 ஆம் நூற்றாண்டிலிருந்தே கன்னட மொழி பேசும் மக்கள், தமிழ்நாட்டில் காணப்படுகின்றனர். மேலைக் கங்கர்கள், சாளுக்கியர்கள், இராட்டிரகூடர், போசளப் பேரரசு மற்றும் விஜயநகரம் போன்ற பல்வேறு கன்னட இராச்சியங்கள், தற்போதைய தமிழ்நாட்டின் சில பகுதிகளை, குறிப்பாக கொங்கு நாடு பகுதியை தங்கள் ஆதிக்கங்களாகக் கொண்டிருந்தன. போசளப் பேரரசு மற்றும் விஜயநகரப் பேரரசின் கன்னட ஆட்சியாளர்கள் காஞ்சி, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் ஆகியவற்றை தலைநகராகக் கொண்டு 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து விஜயநகரப் பேரரசின் இறுதி வரை, குறிப்பாக தெற்கில் இஸ்லாமிய படையெடுப்புகளின் போது, தமிழ்நாட்டின் இந்து ஆலயங்களை தெற்கில் வடக்கத்திய படையெடுப்புகளிலிருந்து பாதுகாப்பதில் போசளப் பேரரசு மற்றும் விஜயநகர ஆட்சியாளர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
இவர்கள் பெரும்பாலும் விருதுநகர், தருமபுரி, சேலம், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும், குறிப்பாக கர்நாடகாவின் எல்லையோரமான ஓசூர் மாநகராட்சியிலும் காணப்படுகிறார்கள். 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெருநகரப் பகுதிகளில், சேலம் மாநகரம் அதிக அளவில் கன்னட மொழி பேசும் மக்களைக் கொண்டிருந்தது.
மலையாள மக்கள்
மலையாளிகள், மலையாள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், இது கேரளா, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அதிகாரப்பூர்வ அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 0.89% பேர் மலையாளம் பேசுகின்றனர். மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் பெரும்பாலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி ஆகிய மேற்கு மாவட்டங்களில் காணப்படுகின்றனர். 1971 ஆம் ஆண்டில், பெருநகரப் பகுதிகளில், கோயம்புத்தூரில், மலையாளம் பேசும் மக்கள் தொகை அதிகமாக இருந்தது.
படுக மக்கள்
படுகர்கள் படுக மொழி பேசுபவர்கள். காலனித்துவ பிரித்தானிய ஆட்சியாளர்களால் நீலகிரி மாவட்டத்தின் பழமையான பழங்குடியினரில் முதன்மையானவர்கள் என்று அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் தற்போது தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர். நீலகிரியில், படுகர்கள் ஒரு தனித்துவத்தைக் கொண்டுள்ளனர். தோடர்கள், கோத்தர்கள் மற்றும் குரும்பர்கள் போன்ற பிற பழங்குடி குழுக்களால் நீலகிரியில் பேசப்படும் பிற எழுத்து அல்லாத மொழிகளைப் போலவே, படுக மொழிக்கும் அதன் சொந்த எழுத்து இல்லை. படுக மொழி இந்த பழங்குடி குழுக்களுக்கு இடையேயான தொடர்பு மொழியாக இருந்தது. படுகர்கள் நீலகிரிகளின் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடி குழு மற்றும் ஆதிக்கம் செலுத்தும் நில உரிமையாளர்கள் மற்றும் ஒரு தனித்துவமான கலாச்சாரம் மற்றும் உடையைக் கொண்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து இடங்களும் படுகர்கள் மொழியிலிருந்து தங்கள் பெயரைப் பெற்றன. படுகர்கள் எத்தையம்மன் மற்றும் ஹிரியோடையாவை வணங்குகிறார்கள்.
மராத்திய மக்கள்
மராத்தியர்கள் அல்லது மகாராஷ்டிரர்கள் என்பவர்கள் இந்திய-ஆரிய மொழியான, மராத்தியைப் பேசும் ஒரு இனமொழியியல் குழுவாகும். அவர்கள் மேற்கு இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 0.1% பேர் மராத்திய மொழியை, தாய்மொழியாக கொண்டு பேசுபவர்கள் வாழ்கின்றனர்.[3] மராட்டியர்கள் பெரும்பாலும் சென்னை நகரத்திலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி,திருப்பத்தூர் ,கிருஷ்ணகிரி, வேலூர்,இராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், காஞ்சிபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் மகாராட்டிரா, பெங்களூர், வட இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்ததால், தமிழகத்தில் மராத்தி மக்கள் தொகை சமீபத்தில் குறைந்துள்ளது.[4]
சௌராட்டிர மக்கள்
சௌராட்டிரியர்கள் என்பவர்கள் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் வசிக்கும் சௌராட்டிர மொழி பேசும் ஒரு இனமொழியியல் குழுவாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இம் மொழி பேசுவோர் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரப் பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சௌராட்டிர மொழி, ஒரு இந்திய-ஆரிய மொழியாகும்.[5] 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் சௌராஷ்டிரா மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 185,420 ஆகும்.
சௌராட்டிர மொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டில், மதுரையில் பெரும்பான்மையாக உள்ளனர்,[6] அதை தொடர்ந்து, காஞ்சிபுரம், ஆரணி, ஆம்பூர், வாலாஜாபேட்டை, புவனகிரி, சிதம்பரம், சேலம், அம்மாபேட்டை நாமக்கல், இராசிபுரம், பரமத்தி, தஞ்சை, திருபுவனம், தாராசுரம், துவரங்குறிச்சி, திருவாரூர், கும்பகோணம், திருவையாறு, அம்மையப்பன், சேலம், தஞ்சாவூர், அய்யம்பேட்டை, திருச்சி, உறையூர், இலுப்பூர், பரம்பூர், அறந்தாங்கி, திண்டுக்கல், பெரியகுளம், நிலக்கோட்டை, பரமக்குடி, இராமநாதபுரம், பாளையங்கோட்டை, கிளாக்குளம், வெள்ளாங்குழி, புதுக்குடி, வீரவநல்லூர், கோட்டாறு (நாகர்கோவில்), மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர்.
பிற இனக்குழுக்கள்
தமிழ்நாட்டில் வசிக்கும் சிறிய இனக்குழுக்களில் துளுவர்கள், மார்வாடிகள், குஜராத்திகள், சிந்திகள், பஞ்சாபிகள் மற்றும் பீகாரிகள் உள்ளனர். சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் பஞ்சாபிலிருந்து சீக்கியர்களும், இராஜஸ்தானிலிருந்து சைனர்களும் கணிசமான எண்ணிக்கையில் காணப்படுகிறார்கள். கோயம்புத்தூர் நகரில் கர்நாடகாவிலிருந்து குடிபெயர்ந்த கொங்கணி மொழி பேசும் கவுட சாரஸ்வத் பிராமணர்கள் கணிசமான அளவில் உள்ளனர். சென்னை, சௌகார்பேட்டையில், 1950களில் குசராத், இராசத்தான் மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்த மார்வாரிகள், அடகு வியாபாரம், மொத்த விற்பனை முகமைகளில் ஈடுபடுகின்றனர். பல கடைகள் இந்தி அல்லது குசராத்தி பெயர்ப் பலகைகளைத் தாங்கி நிற்கின்றன.[7] நாராயண முதலித் தெரு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு மற்றும் இரத்தன் பசார், காசிச் செட்டி தெரு ஆகியன சில முக்கிய சாலைகளாகும்.
மேற்கோள்கள்
- ↑ "Abstract of speakers' strength of languages and mother tongues –2001". Office of The Registrar General & Census Commissioner, India. Archived from the original on 20 January 2017.
- ↑ Jain, Bharti (21 June 2014). "Nearly 60% of Indians speak a language other than Hindi". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Nearly-60-of-Indians-speak-a-language-other-than-Hindi/articleshow/36922157.cms.
- ↑ "Census of India - DISTRIBUTION OF 10,000 PERSONS BY LANGUAGE". Government of India. Retrieved 2009-09-23.
- ↑ Gopal, Ashok (August 1986). "Shivaji's Forgotten Cousins". Poona Digest. http://www.cse.iitb.ac.in/~sudarsha/MEF/Shivaji%20Forgotton-%20New.pdf.
- ↑ "Saurashtra" (in en). Ethnologue. https://www.ethnologue.com/language/saz.
- ↑ The Hindu, 21 de maig de 2016
- ↑ Venkatraman, Vijaysree (June 16–30, 2018). "A virtual walk through Sowcarpet". Madras Musings 28 (5). https://www.madrasmusings.com/vol-28-no-5/a-virtual-walk-through-sowcarpet/. பார்த்த நாள்: 9 January 2023.