பிரணப் முகர்ஜி
பிரணாப் குமார் முகர்ஜி (Pranab Mukherjee, வங்காளம்: প্রণব কুমার মুখার্জী, 11 திசம்பர் 1935 - 31 ஆகத்து 2020) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), இந்திய அரசியல்வாதி. 13-ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணாப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.[2] முன்னதாக கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து சட்டப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
1969-ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளிலும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ஆம் ஆண்டு 14-ஆவது மக்களவைக்கு மேற்கு வங்காளத்தில் உள்ள ஜங்கிப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், 2009-ஆம் ஆண்டு 15-ஆவது மக்களவைக்கு ஜங்கிப்பூரிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [3]. இந்திரா காந்தி அமைச்சரவையில் 1982 - 84-இல் நிதியமைச்சராகப் பணியாற்றினார். இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி நடத்தினார். 2004-06-இல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்[4].
2012-ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5] சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.
இவரது நூல்கள்:
- பியான்ட் சர்வைவல்: எமெர்ஜிங் டைமன்சன்ஸ் ஆப் இந்தியன் எக்கனமி-1984.
- ஆஃப் தி டிராக் - 1987.
- சாகா ஆப் ஸ்ட்ரக்கிள் அண்ட் சேக்ரிபைஸ் - 1992.
- சேலஞ்சஸ் பிஃபோர் தி நேசன் - 1992.
- தாட் அண்ட் ரிப்லெக்சன்ஸ் - 2014.
- தி டிராமடிக் டிகேட்: தி இந்திரா காந்தி இயர்ஸ் - 2014.
தனிவாழ்வு
மேற்கு வங்காளம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. இவரின் தந்தை 1952-64 வரை மேற்கு வங்காளம் மாநில சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார் [6][7]. இவர் 1957ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர்[8]. அபிஜித், மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சியின் ஜஙிபுர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார், மகள் கதக் நடன கலைஞராக உள்ளார்[9]
விருதுகள்
- பாரத ரத்னா (2019)[10]
மேற்கோள்களும் குறிப்புக்களும்
- ↑ "Political Profile". பிரணப் முகர்ஜியின் தனிப்பட்ட வலைத்தளம். Archived from the original on 2012-06-17. Retrieved 16 சூன் 2012.
- ↑ https://www.vikatan.com/personal-finance/money/5234-
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-23. Retrieved 2012-07-25.
- ↑ http://news.vikatan.com/?nid=9451[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "It's President Pranab". இந்தியன் எக்சுபிரசு. 23 சூலை 2012. Retrieved 23 சூலை 2012.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-21. Retrieved 2012-07-22.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-09-04. Retrieved 2012-06-16.
- ↑ http://india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=4195
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-31. Retrieved 2012-07-22.
- ↑ பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது