மாசி
சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் பதினோராவது மாதம் மாசி ஆகும். சூரியன் கும்ப இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 48 நாடி, 24 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

வசந்த காலத்தின் தொடக்கமாகவும், குளிர் மெல்ல குறைந்து வெப்பம் சீராகும் ஒரு இடைநிலைக் காலமாகவும் இம்மாதம் திகழ்கிறது.
ஆன்மீக ரீதியாக மாசி மாதம் சிவபெருமான் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாகும். இம்மாதத்தின் தேய்பிறை சதுர்த்தசி அன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு முழுவதும் சிவ பக்தர்கள் விழித்திருந்து நான்கு கால பூசைகளில் பங்கேற்று இறைவனை வழிபடுகின்றனர். மேலும், இம்மாதத்தின் பௌர்ணமி அன்று வரும் மாசி மகம் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்நாளில் புண்ணிய நதிகள், குளங்கள் மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். குறிப்பாகக் கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் விழா உலக அளவில் பிரசித்தி பெற்றது. தமிழ் நாட்டில் உள்ள பல கோயில்களில் மாசி தேரோட்டம் நடைபெறும்.
வாழ்வியல் முறையில் மாசி மாதம் பெண்களுக்குரிய மிக முக்கியமான நோன்பான காரடையான் நோன்பைக் கொண்டுள்ளது. மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்கும் வேளையில், சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியும், திருமணமாகாத பெண்கள் நல்ல துணை அமைய வேண்டியும் இந்த நோன்பைக் கடைப்பிடிக்கின்றனர். மேலும், மாசி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திருநாள் 'வசந்த பஞ்சமி' என்று கலைமகளுக்கு உரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. வேளாண்மைத் தொழிலில் இது அறுவடைக்குப் பிந்தைய செழிப்பு மற்றும் அடுத்த பருவத்திற்கான திட்டமிடல் காலமாக அமைகிறது.
தமிழ் மாதங்கள்
| வரிசை எண் | தமிழ் சூரிய மாதம் | ஆங்கில தேதிகள் | தமிழ் மாதம் (ஆங்கிலம்) | சந்திர மாதம் (சமஸ்கிருதம்) | சூரிய மாதம் (இராசி) | இராசி அடையாளம் | முக்கிய நட்சத்திரம் | சூரிய அடிப்படையிலான திருவிழாக்கள் | சந்திர அடிப்படையிலான திருவிழாக்கள் |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | சித்திரை | ஏப் 14 – மே 14 |
Chithirai | சைத்ர | மேழம் (மேஷம்) | வருடை (ஒரு வகை ஆடு) | சித்திரை நட்சத்திரம் | தமிழ்ப் புத்தாண்டு, சித்திரைத் திருவிழா | இராம நவமி, சித்திரா பௌர்ணமி |
| 2 | வைகாசி | மே 15 – ஜூன் 14 | Vaikasi | வைசாக | விடை (ரிஷபம்) | காளை அல்லது ஆண் மாடு | விசாகம் நட்சத்திரம் | வைகாசி விசாகம் | நரசிம்ம ஜெயந்தி |
| 3 | ஆனி | ஜூன் 15 – ஜூலை 16 | Aani | ஜ்யேஷ்ட | ஆடவை (மிதுனம்) | இரட்டைகள் | அனுசம் | ஆனி திருமஞ்சனம் | குரு பூர்ணிமா |
| 4 | ஆடி | ஜூலை 17– ஆக 16 |
Aadi | ஆஷாட | கடகம் | நண்டு | பூராடம் / உத்திராடம் | ஆடிப்பெருக்கு | ஆடி அமாவாசை, வரலட்சுமி நோன்பு |
| 5 | ஆவணி | ஆக 17 – செப் 16 | Avani | ஷ்ராவண | சிங்கம் / மடங்கல் (சிம்மம்) | சிங்கம் | திருவோணம் | ஆவணி அவிட்டம் | கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி |
| 6 | புரட்டாசி | செப் 17 – அக் 17 | Purattasi | பத்ரபாத | கன்னி | கன்னிப்பெண் | பூரட்டாதி / உத்திரட்டாதி | புரட்டாசி சனிக்கிழமை விரதம் | நவராத்திரி நோன்பு, விஜயதசமி |
| 7 | ஐப்பசி | அக் 18 – நவ 16 | Aippasi | அஸ்வின | துலை (துலாம்) | இருபக்கத்திற்கும் நடுநிலையில் இருக்கும் துலாபாரம் | அச்சுவினி | அன்னாபிசேகம் | தீபாவளி, கந்த சஷ்டி |
| 8 | கார்த்திகை | நவ 17 – டிச 15 |
Karthikai | கார்திக | நளி (விருச்சிகம்) | தேள் | கிருத்திகை | கார்த்திகை விளக்கீடு | கார்த்திகை பூர்ணிமா |
| 9 | மார்கழி | டிச 16 – ஜன 13 | Margazhi | மார்கஷீர்ஷ | தனுசு | வில் மற்றும் அம்பு சேர்ந்திருக்கும் ஒரு சிலை | மிருகசீரிடம் | வைகுண்ட ஏகாதசி | திருவாதிரை நோன்பு |
| 10 | தை | ஜன 14 – பிப் 12 | Thai | பௌஷ | சுறவம் (மகரம்) | ஆடு | பூசம் | தைப்பொங்கல் | ரத சப்தமி |
| 11 | மாசி | பிப் 13 – மா 13 |
Masi | மக | குடம் (கும்பம்) | ஒரு பானையிலிருந்து பெருகியோடும் நீர் | மகம் | மாசி மகம் | மகா சிவராத்திரி |
| 12 | பங்குனி | மா 14 – ஏப் 13 |
Panguni | பல்குண | மீனம் | இரு மீன்கள் | உத்தரம் | பங்குனி உத்திரம் | ஹோலிகா தகனம் |
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
| தமிழ் மாதங்கள் |
|---|
| சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி |