மல்லீக்கோழி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மல்லீக்கோழி
படிமம்:Malleefowl 0A2A4564.jpg
மேற்கு ஆத்திரேலியாவில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மெகாபோடே
பேரினம்:
லெய்போ
இனம்:
லெ. ஓசிலேட்டா
இருசொற் பெயரீடு
லெய்போ ஓசிலேட்டா
கொளல்டு, 1840

மல்லீக்கோழி (Malleefowl) என்பது தரையில் வழும் ஒரு ஆத்திரேலியப் பறவையாகும். இது வீட்டுக் கோழியின் அளவு இருக்கும் (அதனுடன் இது தொலைதூர உறவுடையது). ஆண் பறவைகளால் தரையில் குழிபறித்து கட்டப்படும் பெரிய கூட்டில் முட்டைகள் இடப்பட்டு அக்கூடு மண்ணால் நிரப்பப்பட்டு, அதில் குஞ்சுகள் பொரித்து வெளிவந்து பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் வளர்வதற்காக இதன் குஞ்சுகள் அறியப்படுகின்றன. அழிந்துபோன இராட்சத மல்லிக்கோழி இதன் நெருங்கிய உறவினராக இருந்தபோதிலும், இது லீபோவா பேரினத்தில் எஞ்சியுள்ள ஒரே பறவை ஆகும்.

நடத்தை

படிமம்:Malleefowl-camouflage.JPG
உருமறைப்புடன் கூடிய மல்லிக்கோழி

மல்லிக்கோழிகள் கூச்ச சுபாவமுள்ள, எச்சரிக்கைமிகுந்த, தனிமை விரும்பி பறவைகளாகும். பொதுவாக இவை ஆபத்திலிருந்து தப்பிக்கவோ அல்லது மரத்தின் மேலே ஏறுவதற்கு மட்டுமே பறக்கின்றன. மிகவும் சுறுசுறுப்பான பறவையாக இருந்தாலும், தொந்தரவு ஏற்பட்டால் அசைவற்று போகும். இவற்றின் சிக்கலான வடிவ இறகுகளானது உருமறைப்பாகி பிறறின் கண்களுக்குத் தெரியாமல் தப்பிவிடுகின்றன. இவை சத்தமின்றியும் விரைவாகவும் மரத்தினடியில் மறைந்துவிடும் (ஆச்சரியப்பட்டாலோ அல்லது துரத்தப்பட்டாலோ மட்டுமே பறந்து செல்லும்). வேட்டையாடிகளிடமிருந்து தப்பிக்க இவை பல தந்திரங்களைப் பயன்படுத்தும்.

இனப்பெருக்கம்

ஜோடிகள் ஒரு பகுதியில் வாழ்கின்றன. ஆனால் பொதுவாக அவை தனித்தனியாகவே இரைதேடி உண்ணும்.

குளிர்காலத்தில் பொதுவாக, ஆண் பறவையானது, குட்டையான மரங்களுக்கு இடையில் ஒரு திறந்தவெளி நிலப் பகுதியைத் தேர்ந்தெடுக்கிறது. அங்கே மண்ணில் சுமார் 3 m (9.8 அடி) அகலமும், 1 m (3.3 அடி) ஆழமுள்ள ஒரு குழியை கால்களால் கிளறித் தோன்டுகிறது. குளிர்காலத்தின் பிற்பகுதியிலும், வசந்த காலத்தின் துவக்கத்திலும், அந்தக் குழியில் மக்ககூடிய கரிமப் பொருட்களான குச்சிகள், இலைகள், பட்டைகள் ஓன்றவற்றைச் சேகரிக்கத்து 50 m (160 அடி) உயரம் வரை நிரப்பி, அதை ஒரு கூடுபோல கட்டுகிறது, இது குழியில் பொதுவாக சுமார் 0.6 m (2.0 அடி) வரை அமைக்கப்படும். இதில் உள்ள குப்பைகளின் அளவு மாறுபடும்; அவை கிட்டத்தட்ட முற்றிலும் கரிமப் பொருளாக இருக்கும், பெரும்பாலும் இடையில் மணல் போன்ற பொருட்களும் இருக்கலாம்.

மழைக்குப் பிறகு, கரிம்ப் பொருட்கள் மேலும் சிதைவடைவதற்காக பொருட்களை மீண்டும் கலக்கிறது. நிலைமை சாதகமாக இருந்தால், ஆகத்து மாதத்தில் (தெற்கு குளிர்காலத்தின் கடைசி மாதம்) முட்டை இடும் பகுதியைத் தோண்டுகிறது. பெண் பறவையும் சில நேரங்களில் முட்டைக் குழியை தோண்டுவதில் உதவும். அந்த நேரமானது வெப்பநிலை, மழைப்பொழிவு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். பெண் பறவை பொதுவாக செப்டம்பர் - பெப்ரவரி மாதங்களுக்கு இடையில் முட்டையிடும். முட்டைகள் இட்டபிறகு அதன் மீது மண் நிரப்புகின்றன. போதுமான மழை பெய்தால் குப்பைகள் மக்கும். ஆண் பறவை தொடர்ந்து கூடு உள்ள மண் மேட்டைப் பராமரிக்கிறது. கோடைக் காலம் நெருங்கும்போது (வெப்பநிலையைப் பராமரிப்பதற்காக இருக்கலாம்) படிப்படியாக கூட்டில் உள்ள கரிமக் கலவையின் மேலே மண்ணைத் தள்ளுகிறது.

படிமம்:Malleefowl mound.jpg
மல்லிக்கோழி கூட்டு மேடு

ஆண் பறவைகள் பொதுவாக தங்கள் நான்காவது வயதில் தங்கள் முதல் கூட்டு மேட்டை உருவாக்குகின்றன (அல்லது ஏற்கனவே உள்ள ஒன்றை எடுத்துக்கொள்கின்றன), ஆனால் மூத்த பறவைகளைப் போல ஈர்க்கக்கூடிய கூட்டைக் கட்ட முடியாது. அவை வாழ்நாள் முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் என்று கருதப்படுகிறன. மேலும் ஆண் பறவைகள் ஆண்டில் ஒன்பது மாதங்கள் கூடுகளைப் பாதுகாக்க அதன் அருகிலேயே தங்கியிருந்தாலும், பின்னர் அவை வேறு இடங்களுக்குச் செல்லக்கூடும், பின்னர் அதே பகுதிக்கு மீண்டும் திரும்புவதில்லை.

பெண் பறவை இரண்டு, மூன்று முதல் 30க்கும் மேற்பட்ட பெரிய, மெல்லிய ஓடு கொண்ட முட்டைகளை இடுகிறது. பெரும்பாலும் சுமார் 15 முட்டைகள் வரை இடும். பொதுவாக ஒரு வார இடைவெளியில் முட்டைகளை இடும். ஒவ்வொரு முட்டையும் பெண் பறவையின் உடல் எடையில் சுமார் 10% எடையுள்ளதாக இருக்கும். ஒரு பருவத்தில், அது பொதுவாக தனது சொந்த எடையில் 250% எடைகொண்ட முட்டைகளை இடும். பறவைகளுக்கும் மழைப்பொழிவுக்கும் ஏற்பவும் கூட்டின் அளவு பெரிதும் மாறுபடும். குஞ்சுபொரிக்கும் காலம் வெப்பநிலையைப் பொறுத்தது சுமார் 50 முதல் கிட்டத்தட்ட 100 நாட்கள் வரை ஆகும்.

முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியேற தங்கள் கால்களை வலுவாக பயன்படுத்துகின்றன. பின்னர் தங்கள் முதுகில் மண்ணைத் தள்ளி மேற்பரப்புக்கு முன்னேறிச் சென்று, 5 முதல் 10 நிமிடங்கள் கடுமையாகப் போராடி 3 முதல் 15 cm (1 முதல் 6 அங்) வரை உயரத்தை அடைகின்றன. பின்னர் ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் ஓய்வெடுத்து மீண்டும் மேலே வரும் பணியைத் தொடங்குகின்றன. மேற்பரப்பை அடைய 2 முதல் 15 மணி நேரம் வரை ஆகும். குஞ்சுகள் கூட்டிலிருந்து சிறிதும் எச்சரிக்கை உணர்வு இன்றி வெளியே வருகின்றன. கண்களும், அலகும் இறுக்கமாக மூடியபடி இருக்கும். பின்னர் நன்கு மூச்சை இழுத்து கண்களைத் திறக்கின்றன. பின்னர் 20 நிமிடங்கள் வரை அசைவற்று உறைந்தபடி இருக்கும்.

படிமம்:Malleefowl Pengo.svg
ஒரு மாலிக்கோழி கூடுள்ள மேட்டின் இந்த குறுக்குவெட்டு தோற்றம் முட்டை அறை மற்றும் மக்கும் உரத்தின் அடுக்குக்கு ஆகியவற்றக்குப் பயன்படும் மணல் அடுக்கை (1 மீ தடிமன் வரை) காட்டுகிறது. முட்டை அறை காப்பு அடுக்கில் காற்று துவாரங்களைத் திறந்து மூடுவதன் மூலம் முட்டை அறையின் வெப்ப நிலை 33°C இல் பராமரிக்கப்படுகிறது, அதே நேரத்தில் வெப்பம் கீழே உள்ள உரம் மக்குவதிலிருந்து வருகிறது.

பின்னர் குஞ்சானது விரைவாக துளையிலிருந்து வெளியே வந்து, கூட்டடின் மேட்டிலிருந்து உருண்டு அல்லது தள்ளாடி, அங்கிருந்து வெளியேறி சில நிமிடங்களில் புதருக்குள் மறைந்துவிடும். ஒரு மணி நேரத்திற்குள், ஓரளவு நன்றாக ஓடவும் செய்யும். இரண்டு மணி நேரத்திற்குள் மிக வேகமாக ஓட முடியும், மேலும் வால் இறகுகள் முழுமையாக வளரவில்லை என்றாலும், இது ஒரு நாளுக்குள் வலுவாக பறக்கும்.

குஞ்சுகளுக்கு பெரிய பறவைகளுடனோ அல்லது பிற குஞ்சுகளுடனோ எந்த தொடர்பும் இருப்பதில்லை; அவை குஞ்சு பொரித்து ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. இனச்சேர்க்கை அல்லது பிராந்திய தகராறுகளைத் தவிர எந்த வயதுப் பறவையும் ஒன்றோடொன்று சேர்ந்து இருப்பதில்லை.

பரவலும் வாழ்விடமும்

இது தெற்கு ஆஸ்திரேலியாவின் ஒப்பீட்டளவில் வளமான பகுதிகளின் எல்லைகளில் உள்ள அரை வறண்ட புதர்ப் பகுதிகளில் வாழ்கின்றன. அங்கு இப்போது இவை மூன்று தனித்தனிப் பகுதிகளாக பிரிந்துள்ளன. அவை சிம்ப்சன் பாலைவனத்தின் எல்லைப் பகுதி, ஸ்பென்சர் வளைகுடாவின் மேற்கே உள்ள முர்ரே - முர்ரம்பிட்ஜி படுகை, மேற்கு ஆத்திரேலியாவின் வளமான தென்மேற்கு மூலையின் அரை வறண்ட எல்லைப் பகுதி ஆகியவை ஆகும்.

முக்கியமான பறவைப் பகுதிகள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதி முழுவதும் உள்ள பல முக்கியமான பறவைப் பகுதிகள் பன்னாட்டு பறவை வாழ்க்கையால் மல்லிக்கோழிப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன: [2]

பாதுகாப்பு நிலை

மல்லிக்கோழிகள் அவற்றின் வாழிட எல்லை முழுவதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியதாகக் கருதப்படுகிறன. ஆக்கிரமிப்பு இனமான சிவப்பு நரிகள் வேட்டையாடுதல் ஒரு காரணியாக உள்ளது. ஆனால் முக்கியமான பிரச்சினைகளாக மாற்றியமைக்கபட்ட தீ விதிமுறைகள், வாழிடத் துண்டாக்கம் ஆகியவை உள்ளன. தெற்கு முடி-மூக்கு வோம்பாட்டை விலங்கு போலவே, இவை காலநிலை மாற்றத்தின் விளைவாக அதிகரித்து வரும் வறட்சியின் தீவிரத்தால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளன. [3] ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் பெரிய அளவிலான நிலப்பரப்பில் மல்லிக்கோழிகள் காணப்பட்டன.

மேற்கோள்கள்

  1. BirdLife International (2022). "Leipoa ocellata". IUCN Red List of Threatened Species 2022: e.T22678646A212766400. doi:10.2305/IUCN.UK.2022-1.RLTS.T22678646A212766400.en. https://www.iucnredlist.org/species/22678646/212766400. பார்த்த நாள்: 7 February 2023. 
  2. "Malleefowl". Important Bird Areas. BirdLife International. 2012. Retrieved 2012-10-27.
  3. Benshemesh, Joe (2007). "National Recovery Plan for malleefowl" (PDF). Australian Government. pp. 30, 66, 97. Retrieved 17 August 2018.
"https://tamilar.wiki/w/index.php?title=மல்லீக்கோழி&oldid=463121" இலிருந்து மீள்விக்கப்பட்டது