ரிஃபிஃபி
| ரிஃபிஃபி | |
|---|---|
அசல் பிரெஞ்சுத் தலைப்புடன் கூடிய திரைப்படச் சுவரொட்டி | |
| இயக்கம் | ஜூல்ஸ் டசின் |
| தயாரிப்பு |
|
| திரைக்கதை |
|
| இசை | ஜார்ஜ் ஓரிக் |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | பிலிப் அகோஸ்டினி |
| படத்தொகுப்பு | ரோஜர் டுவையர் |
| விநியோகம் | பதே (பிரான்ஸ்) |
| வெளியீடு | 13 ஏப்ரல் 1955 |
| ஓட்டம் | 115 நிமிடங்கள் |
| நாடு | பிரான்சு |
| மொழி | பிரெஞ்சு |
| ஆக்கச்செலவு | $200,000[1][2] |
ரிஃபிஃபி (Rififi பிரான்சியம்: Du rififi chez les hommes [4] ) என்பது 1955-இல் வெளியான ஒரு பிரெஞ்சு குற்றவியல் திரைப்படமாகும். அகஸ்டே லெ பிரெட்டனின் இதே பெயரிலான புதினத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட திரைப்பட இயக்குநரான ஜூல்ஸ் டாஸின் இயக்கிய இத்திரைப்படத்தில், வயதான கேங்ஸ்டர் டோனி "லெ ஸ்டெஃபனோயிஸ்" ஆக ஜீன் செர்வைஸ், ஜோ "லெ சுவேடோயிஸ்" ஆக கார்ல் மோனர், மரியோ ஃபராட்டியாக ராபர்ட் மானுவல், சீசர் "லெ மிலானே" ஆக ஜூல்ஸ் டாஸின் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நால்வரும் இணைந்து, ரூ டி லா பேக் தெருவில் உள்ள ஒரு உயர்தரமான நகைக் கடையில் கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒரு கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இத்திரைப்படத்தின் கொள்ளை நடக்கும் முதன்மைப்பகுதியானது, உரையாடலையோ இசையையோ இன்றி, கிட்டத்தட்ட அமைதியாக நடக்கும் குற்றத்தை விரிவாகச் சித்தரித்து படமாக்கப்பட்ட, சிக்கலான ஒரு அரை மணி நேர காட்சியாகும். இந்தக் கற்பனையான கொள்ளைக் காட்சி, உலகின் பல பகுதிகளில் உண்மையான கொள்ளைக்காரர்களுக்கு ஒரு முன்னுதாரனமாக பின்பற்றப்பட்டுள்ளது. [5]
ஆலிவுட்டில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பிறகு, டசின் பாரிசின் பிரான்சில் படம் இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்; அங்குதான் ரிஃபிஃபி திரைப்படத்தை இயக்கும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். அசல் புதினத்தின் சில பகுதிகள் அவருக்குத் திருப்தி இல்லாவிட்டாலும், டாசின் இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். படத்தை குறைந்த செலவில், நட்சத்திர நடிகர்கள் இல்லாமல், குறைந்த ஊதியத்தில் பணிபுரியக்கூடிய திரைப்படக் குழுவினருடன் படமாக்கினார்.
இப்படம் முதன்முதலில் வெளியானபோது, பிரான்ஸ், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் உள்ள பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் 1955 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை டாஸினுக்குப் பெற்றுத் தந்தது. [6] ரிஃபிஃபி சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான நேஷனல் போர்டு ஆஃப் ரிவியூவால் பரிந்துரைக்கப்பட்டது. ரிஃபிஃபி 2000 மற்றும் 2015 ஆகிய இரு ஆண்டுகளிலும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யபட்டது. [7] மேலும் பிரெஞ்சு ஃபிலிம் நோயர் வகையைச் சேர்ந்த மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக, நவீன திரைப்பட விமர்சகர்களால் இன்றும் பெரிதும் பாராட்டப்படுகிறது.
கதை
நகை கொள்ளைக்காக ஐந்தாண்டு சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு வெளிவரும் டோனி "லெ ஸ்டெஃபனோயிஸ் ", தெருவில் பணமின்றி அலைந்து கொண்டிருக்கிறான். அவனின் நண்பன் ஜோ, தன் இத்தாலிய நண்பனான மரியோவுடன் ஒரு சிறிய நகைக்கடைக் கொள்ளைத் திட்டம் பற்றி அவனிடம் பேசுகிறான். அந்தத் திட்டத்தின்படி, மூவரும் பட்டப்பகலில் பாரிசில் உள்ள ஒரு நகைக்கடையின் முன்பக்க சன்னல் கண்ணாடியை உடைத்து, சில இரத்தினங்களைத் திருட வேண்டும். டோனிக்கு அதில் விருப்பமில்லாமல் மறுத்துவிடுகிறான். தன் காதலி மடோவைத் தேடிச் செல்கிறான். ஒரு இரவு விடுதியில் வேலை செய்யும் மடோ அந்த இரவு விடுதி உரிமையாளரான பியர் குரூட்டர் என்ற தாதாவுடன் உறவில் இருப்பதை அவன் அறிகிறான். அவள் குரூட்டருடன் நெருக்கமான உறவில் இருந்ததற்காக டோனி அவளைக் கொடூரமாகத் தாக்குகிறான். பணமின்றி ஏதும் இல்லை என்று உணர்ந்த டோனி அந்தக் கொள்ளைத் திட்டம் குறித்த தனது எண்ணத்தை மாற்றிக்கொள்கிறான். வெறும் கண்ணாடி சன்னலை உடைத்து சிறிய கொள்ளையடிப்பதற்குப் பதிலாக, மிகவும் கடினமான ஆனால் அதிக விலை உயர்ந்த நகைகள் கொண்ட பாதுகாப்புப் பெட்டகத்தில் கொள்ளையடிக்கும் மாபெரும் கொள்ளைக்கு தன் நண்பர்களுடன் திட்டமிடுகிறான். பாதுகாப்புப் பெட்டகங்களைத் திறக்கும் திறமை கொண்ட, இத்தாலியரான தன் சக நாட்டவரான சீசரை கொள்ளையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மரியோ பரிந்துரைக்கிறான். அந்த நால்வரும் கடைக்குள் புகுந்து அதன் அதிநவீன எச்சரிக்கை அமைப்பைச் செயலிழக்கச் செய்வதற்காக ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தைத் தீட்டி ஒத்திகை பார்க்கிறனர்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு, மாடியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ஒரு குழுவினர் சிமெண்ட் கூரையை உளிகொண்டு கன்னம் வைத்து உள்ளே இறங்கி கொள்ளையில் ஈடுபடுகின்றனர். பதற்றம் நிறைந்த அந்தக் கொள்ளையை முடிந்து, குற்றவாளிகள் எந்தத் தடயத்தையும் விட்டுவிடாமல் தப்பிச்செல்கின்றனர். கொள்ளையின்போது மற்றவர்களுக்குத் தெரியாமல், சீசர் தன் காதலி விவியானுக்காக ஒரு வைர மோதிரத்தை தனியாகத் திருடி அதன் அவளுக்கு பரிசாக கொடுக்கிறான். விவியான், கிரட்டர் கிளப்பில் ஒரு பாடகியாக இருக்கிறாள். இந்தக் கொள்ளை நிகழ்வு தலைப்புச் செய்தியாகிறது. மேலும் அந்த நான்கு பேரும் இலண்டனில் உள்ள ஒருவர் மூலம் கொள்ளைப் பொருட்களை விற்க ஏற்பாடு செய்கிறனர். இதற்கிடையில், கிரட்டர் மாடோவை சென்று பார்கிறான். அவள் அவனது உறவை முறித்துக்கொள்கிறாள். தன் காதலியை தன்னிடமிருந்து பிரித்து தன் வாழ்க்கையில் டோனி தலையிட்டதால் கோபமடைந்த கிரட்டர், போதைக்கு அடிமையான தன் சகோதரன் ரெமிக்கு ஹெராயின் கொடுத்து, டோனியைக் கொலை செய்யும்படி கூறுகிறான். இதற்கிடையில் விவியான் அந்த வைர மோதிரத்தின் மதிப்புத் தெரியாமல் அதைதன் நண்பனுடன் சேர்ந்து குரூட்டரிடம் காட்டுகிறாள். மரியாவின் நண்பன் சீசர் இதைக் கொடுத்தான் என்றதும் நகைக்கடைக் கொள்ளைக்குக் காரணம் சீசர், மரியோ, டோனி ஆகியோர்தான் என்பதை குரூட்டர் உணர்ந்துகொள்கிறான். கொள்ளையர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு மில்லியனை காவல்துறை வெகுமதியாக அறிவித்துள்ள நிலையில், குரூட்டர் டோனியின் கும்பலிடமிருந்து நகைகளைக் கைப்பற்ற முடிவு செய்கிறான். கொள்ளைப் பொருட்கள் எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதைச் சொல்ல மறுத்த மரியோவையும் அவன் மனைவி ஐடாவையும் ரெமி கொடூரமாகக் கொலை செய்கிறான். டோனி அந்தத் தம்பதியரின் வீட்டிலிருந்து நகைகளை மீட்டு, பெயர் குறிப்பிடாமல் அவர்களின் பிரம்மாண்டமான இறுதிச் சடங்கிற்குப் பணம் செலுத்துகிறான். பின்னர் அவன் குரூட்டரைத் தேடிச் செல்கிறான், அப்போது சீசரைக் காண்கிறான். தான் காட்டிக்கொடுத்துவிட்டதாக சீசர் ஒப்புக்கொள்கிறான். "விதிமுறைகளைக்" காரணம் காட்டி, டோனி வருத்தத்துடன் அவனைக் கொன்றுவிடுகிறான்.
இதற்கிடையில், கொள்ளையிட்ட நகைகளைக் கைப்பற்றும் நோக்கில் குரூட்டர்ஸின் அடியாட்கள் ஜோவின் ஐந்து வயது மகன் டோனியோவைக் கடத்தி, நகைகளை ஒப்படைக்குமாறு மிரட்டுகின்றனர். இலண்டன் தரகர் பணயத் தொகையுடன் வருகிறார். அதன்பிறகு, டோனி தனியாகப் போராடி குழந்தையை மீட்கப் புறப்படுகிறான். குழந்தையின் உயிரைக் காக்க இதுவே ஒரே வழி என்று ஜோவிடம் கூறுகிறான். மாடோவின் உதவியுடன், அவன் குருட்டர்ஸின் நாட்டுப்புற வீட்டில் டோனியோவைக் கண்டுபிடித்து, அவனை மீட்கும் போது ரெமியையும், லூயிசையும் கொல்கிறான். பாரிஸுக்குத் திரும்பும் வழியில், ஜோவின் அழுத்தத்தால் மனம்மாறி, பணத்துடன் குருட்டர்சை அவனது வீட்டில் சந்திக்க ஒப்புக்கொண்டதை டோனி அறிகிறான். ஜோ அங்கு வந்ததும், டோனி ஏற்கெனவே குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறி குருட்டர் அவனைக் கொன்றுவிடுகிறான். தன் நண்பனைக் காப்பாற்ற சில வினாடிகள் தாமதமாகிவிட்ட நிலையில், குருட்டர்சால் டோனி பெரும் காயமடைகிறான். ஆனால், கொள்ளைப் பொருட்களுடன் தப்பிச் செல்ல முயலும் குருட்டர்சை டோனி கொன்றுவிடுகிறான். கடுமையாக இரத்தப்போக்குடன், டோனி வெறித்தனமாக காரை ஓட்டிக் கொண்டு பாரிசுக்குத் திரும்பிச் சென்று, டோனியோவைப் பத்திரமாக வீட்டில் இறக்கி விடுகிறான். பின்னர், 120 மில்லியன் பிரெஞ்சு பிராங்க் ரொக்கம் நிரம்பிய ஒரு பெட்டியுடன் உள்ள டோனியை காவல் துறையினரும் வழிப்போக்கர்களும் அவனை நெருங்கும்போது, காரை ஓட்டிக்கொண்டே அவன் இறந்துவிடுகிறான். ஜோவின் மனைவி லூயிஸ், காரிலிருந்து தன் குழந்தையை எடுத்துக்கொண்டு, அந்த சூட்கேட்டையும் உடலையும் போலீசாரிடம் ஒப்படைக்கிறார்.
குறிப்புகள்
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:Cite AV media notes
- ↑ Roger Ebert (6 October 2000). "Rififi (1954)". Chicago Sun-Times. https://www.rogerebert.com/reviews/great-movie-rififi-1954.
- ↑ Le Nouveau Petit Robert, dictionnaire alphabétique et analogique de la langue française பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-85036-668-4 and Le Petit Larousse illustré பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-03-530206-4.
- ↑ The title Du Rififi chez les hommes [dy ʁi.fi.fi ʃe lez‿ɔm] does not directly translate into English. A rough translation would be "Some rumble amongst men". Rififi is a slang word deriving from rif, the French military term for "combat zone" during முதலாம் உலகப் போர், ultimately from the Middle French rufe, "fire" and இலத்தீன் rūfus, "red".[3]
- ↑ [1] The Lethbridge Herald, 18 August 1956 via www.newspaperarchive.com (subscription required)
- ↑ "Festival de Cannes: Rififi". festival-cannes.com. Retrieved 31 January 2009.
- ↑ Rialto Pictures (6 August 2015). "RIFIFI – Trailer". Vimeo, LLC. Retrieved 16 August 2015.