ஜம்ப் சூட் என்னும் குதியாடை (Jumpsuit) என்பது மேல் சட்டையும் கால் சட்டையும் இணைந்த ஒற்றை ஆடையாகும். அசல் ஜம்ப் சூட் ஆடையானது வானூர்திகளில் இருந்து பாராசூட் பொருத்திக் கொண்டு குதிப்பவர்கள் பயன்படுத்தும் ஒற்றை உடையாகும்.

படிமம்:Red Jumpsuit 2017.jpg
நவீன கால உயர் நாகரீக ஜம்ப்சூட் அணிந்த பெண்

முதலில் வானூர்தி குதிப்பவர்களுக்காக ஜம்ப்சூட்கள் வடிவமைக்கபட்டன. அதிக உயரத்தில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலையிலிருந்து உடலைப் பாதுகாக்கவும், கச்சைகள், கொக்கிகள் போன்ற பாராசூட்டுகளுக்கு எவ்வித இடைஞ்சல் தராத பொருட்கள் இல்லாமல் எளிமையாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளாக இருந்தன. இருப்பினும், இன்று, இந்த ஆடை வேறு பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஜம்ப்சூட்டுகள் பொதுவாக எளிமையானவை, இலகுவானவை, அணிய மிகவும் நெகிழ்வானவை என்பதால் இவை வசதியான ஆடைகளாகக் கருதப்படுகின்றன.

ஜம்ப்சூட்டின் வரலாறு

ஜம்ப்சூட் என்பது ஒற்றை உடையாகும். இது உடலில் நன்கு பொருந்துவதாகவும் கைகளையும், கால்களையும் மூடுவதாகவும் உள்ளது. இதன் வரலாறு 1919 வரை செல்கிறது. இது பாராசூட்டிஸ்டுகள் வானூர்திகளில் இருந்து குதிப்பதற்கான உடையாக உருவாக்கப்பட்டது. பாய்லர் சூட் மற்றும் டங்காரிகளும் இதே போன்ற நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மூன்று பயன்பாட்டு ஆடைகளில் (ஜம்ப்சூட்டுகள், பாய்லர் சூட்டுகள், டங்காரிகள்) ஜம்ப்சூட்டுகளே முதலில் பேசன் உடைகளாக மாறின. காரணம் அதன் மெல்லிய வடிவம்.

படிமம்:Graceland 2010-12-18 Memphis TN 39.jpg
எல்விஸ் பிரெஸ்லியின் ஜம்ப்சூட்.

1930களில், ஆடை வடிவமைப்பாளர் எல்சா சியாபரெல்லி பெண்களுக்கான ஜம்ப்சூட்களை வடிவமைக்கத் தொடங்கினார். அவரது வடிவமைப்புகள் ஊரெங்கும் பேசுபொருளாக மாறியது. ஆனால் ஒரு சிலரே இதை உடுத்தினர். பின்னர் 1940களின் நடுப்பகுதியில் விளையாட்டுத் துறையில் இருந்த பெண்களுக்காக அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் வேரா மேக்ஸ்வெல்லின் இந்த ஆடைகளை வடிவமைத்தார். அப்போது விளையாட்டுத் துறையில் உள்ள பெண்களிடையே இது பிரபலமானது.

இரண்டாம் உலகப் போரின் போது, பெண்கள் ஜம்ப்சூட்களை தங்கள் பயன்பாட்டிற்காக அணிந்தனர். 1950களில், போனி காசின் போன்ற அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர்கள் மாலை நேர ஜம்ப்சூட்களை வடிவமைக்கத் தொடங்கினர். ஆனால் பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் பகல்நேர மற்றும் மாலை நேர உடைகளாக ஜம்ப்சூட்கள் பிரபலமடைந்தன. இந்த ஜம்ப்சூட் முதன்முதலில் வோக் இதழில் 1964 செப்டம்பரில் வெளியிடப்பட்டது.

படிமம்:Kimi Raikkonen.jpg
பார்முலா ஒன்று ஓட்டுநர் கிமி ரெய்க்கோனென் ஒரு பாதுகாப்பான ஒற்றை தானிப் பந்தைய உடையில்.

1960 களின் பிற்பகுதியும் 1970 களும் ஜம்ப்சூட்டுக்கு மிகவும் முக்கியமான ஆண்டுகளாகும். இவை விளையாட்டு ஆடைகளாகவும், மாலை நேர அலங்கர வடிவமைப்புகளாகவும் ஆயின. ஒவ்வொரு ஆடை வடிவமைப்பாளரின் வடிவமைப்பிலும் ஜம்ப்சூட்கள் இடம் பெற்றன. 1970களில் ஜம்ப்சூட் இருபாலர் ஆடையாக இருந்தது. புகழ்பெற்ற அமெரிக்க வடிவமைப்பாளர் ஜெஃப்ரி பீன் ஜம்ப்சூட் "அடுத்த நூற்றாண்டின் பந்து மேலங்கி" என்று அழைத்தார், ஆனால் அடுத்த தசாப்தத்திற்கு இது பேசனிலிருந்து வெளியேறியது. நிக்கோலஸ் கெஸ்கியர் 2002 ஆம் ஆண்டில் வெவ்வேறு துணிகள் மற்றும் வடிவங்களில் வடிவமைத்து இதை மீண்டும் கொண்டு வர முயன்றார். புதுப்பிக்கப்பட்ட வடிவிலான ஜம்ப்சூட் மீண்டும் பிரபலமடைந்தது.

படிமம்:CTS waist chains 02.jpg
பிரகாசமான மஞ்சள் நிற ஜம்ப்சூட்டில் கைதி

விமானிகளும் ஓட்டுநர்களும்

விமானிகளும், விண்வெளி வீரர்களும் சில நேரங்களில் தனித்தன்மையான, தீ-தடுப்பு ஜம்ப்சூட்கள் அல்லது விமான உடைகளை அணிகின்றனர். விண்வெளியில் மற்ற வகை ஆடைகள் ஈர்ப்பு விசையற்ற நிலையில் தனித்து மிதக்கவோ, அசையவோ வாய்ப்புள்ளது.

மோட்டார் பந்தயத்தில் ஓட்டுநர்கள் தீயிலிருந்து தங்களைப் பாதுகாப்பிற்காக ஜம்ப்சூட்களை ( ஃபயர் சூட் என்று அழைக்கப்படுகிறது) அணிகின்றனர். மேலும் ( மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களைப் பொறுத்தவரை) சிராய்ப்பிலிருந்து தங்களைக் காக்க தோலாலான ஜம்ப்சூட்டுகளை அணிவார்கள். [1]

கைதிகள்

அமெரிக்க சிறைச்சாலைகளில் கைதிகளின் சீருடையாக குட்டைக் கை ஜம்ப்சூட்கள் பொதுவாக உள்ளன. கைதி யார், சீர்திருத்த அதிகாரி யார் என்பதை அறிய இந்த ஆடை ஒரு வசதியான வழியாக உள்ளது.[2] பிரகாசமான ஆரஞ்சு நிற சீருடைகள் இன்னும் பயன்பாட்டில் இருந்தாலும், நெட்ஃபிக்ஸ் தொடரான ​​ஆரஞ்சு இஸ் தி நியூ பிளாக் தொடரின் செல்வாக்கின் காரணமாக ஆரஞ்சு நிற ஜம்ப்சூட்கள் பிரபலமானதால் சில சிறை நிருவாகங்கள் வேறு நிறங்களுக்கு மாறின.[3] மேலும், அமெரிக்காவில் வண்ணக் குறியீடுகள் கொண்ட சீருடைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு வெவ்வேறு கைதியின் காவல் நிலை[4], பாலினம், பாதுகாப்பு அபாய நிலை, ஒழுக்க வரலாறு, தற்போதைய குற்றச்சாட்டுகளின் தீவிரம், கடந்தகால தண்டனைகள் போன்ற சிக்கல்களைக் குறிப்பதாக வெவ்வேறு நிறங்கள் உள்ளன.[5] தப்பியோடும் கைதிகளை துப்புரவு தொழிலாளர்கள், நெடுஞ்சாலைத் தொழிலார்கள் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படாமல் இருக்க சில சிறை அமைப்புகள் கோடிட்ட சீருடைகளுக்குத் திரும்பின.[6]

மேற்கோள்கள்

  1. Bonsor, Kevin; Nice, Karim (23 February 2001). "NASCAR Fire Suits". HowStuffWorks. Retrieved 2007-12-30.
  2. Pishko, Jessica (2015-06-24). "What Inmates Really Wear in Prison". Racked (in ஆங்கிலம்). Archived from the original on 2020-11-12. Retrieved 2020-04-28.
  3. Hoag, Andy (2014-07-21). "Black and white is the new orange? Sheriff buys jail jumpsuits after orange becomes 'cool'" (in en) இம் மூலத்தில் இருந்து 2020-11-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201112015729/https://www.mlive.com/news/saginaw/2014/07/black_and_white_is_the_new_ora.html. 
  4. Achen, Paris (2013-06-15). "Inmate clothes at Clark County Jail more than fashion" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2020-08-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200802191901/https://www.columbian.com/news/2013/jun/16/inmate-clothes-clark-county-jail-threat-level-save/. 
  5. Elieff, Josette (2017-07-29). "Look how colorful these new inmate uniforms are" (in en) இம் மூலத்தில் இருந்து 2020-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201020153203/https://bringmethenews.com/life/look-how-colorful-these-new-inmate-uniforms-are. 
  6. Vinciguerra, Thomas (2000-10-01). "The Clothes That Make The Inmate" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 2021-04-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210422133204/http://www.nytimes.com/2000/10/01/weekinreview/the-clothes-that-make-the-inmate.html. 
"https://tamilar.wiki/w/index.php?title=குதியாடை&oldid=332685" இலிருந்து மீள்விக்கப்பட்டது