மௌரியக் கலை (Mauryan art) என்பது கிமு 322 முதல் 185 வரை இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்த முதல் இராச்சியமான மௌரியப் பேரரசின் காலத்தில் உருவாக்கப்பட்ட கலை ஆகும். இது இந்திய கலையில் மரத்தின் பயன்பாட்டிலிருந்து கல்லுக்கு மாறிய ஒரு முக்கியமான காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது மௌரிய மன்னர்கள், குறிப்பாக அசோகர் ஆதரவளித்த அரச கலை. தூண்கள், தாதுகோபுரங்கள் மற்றும் குகைகள் அதன் மிக முக்கியமான எஞ்சியிருக்கும் எடுத்துக்காட்டுகளாகும்.

மௌரியக் கலை
மௌரியக் கலையின் மிகவும் பிரபலமான எடுத்துக்காட்டான அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி, தற்போது இந்தியாவின் தேசிய சின்னமாக இருக்கிறாது.
படிமம்:Indian Stone Sphere with Scenes of Rites at the Shrine of a Yaksha, 3rd century BC.jpg
கிமு 3 ஆம் நூற்றாண்டு தேதியிட்ட யக்சன் சன்னதியில் கிடைத்துள்ள சடங்குகளின் காட்சிகளைக் கொண்ட இந்தியக் கல் கோளம்.

அரச அரண்மனை, பாடலிபுத்திர நகரம், சாரநாத்திலுள்ள ஒற்றைக்கல் தண்டவாளம், புத்தகயையிலுள்ள நான்கு தூண்களில் தங்கியிருக்கும் போதிமண்டலம் அல்லது பலிபீடம், கயைக்கு அருகிலுள்ள பராபர் குகைகளிலுள்ள பாறையில் வெட்டப்பட்ட சைத்ய மண்டபங்கள் (அசோகரின் 12-வது ஆட்சியாண்டு தேதியிட்ட கல்வெட்டைத் தாங்கிய சுதாமா குகை உட்பட), அசோகரின் கட்டளைகள் அடங்கிய, கட்டளைகள் இல்லாத தூண்கள், தலைநகரங்களின் நுழைவுவாயிலை அலங்கரிக்கும் விலங்கு மற்றும் தாவர நிவாரணங்கள், தூண்களில் காணப்படும் விலங்குகளின் சிற்பங்கள் , தௌலியிலுள்ள ஒரு பாறையில் வட்டமாக செதுக்கப்பட்ட யானையின் முன் பாதி போன்றவை மௌரிய கலையின் எஞ்சியிருக்கும் மிக முக்கியமானவற்றில் அடங்கும்.[1]

1923இல் எழுதிய ஆனந்த குமாரசுவாமி, மௌரியக் கலைக்கு மூன்று முக்கிய கட்டங்கள் இருப்பதாக வாதிட்டார்.[2] முதல் கட்டம் வேத தெய்வங்களின் பிரதிநிதித்துவத்தின் சில நிகழ்வுகளில் காணப்படுகிறது (மிக முக்கியமான எடுத்துக்காட்டுகள் பாஜா குகைகளில் சூரியன் மற்றும் இந்திரனின் சிற்பங்கள்).[2] இருப்பினும், பாஜா குகைகளின் கலை இப்போது பொதுவாக மௌரியர் காலத்திற்குப் பிந்தையது. அவைகள் கிமு 2-1 ஆம் நூற்றாண்டுகள் வரை தேதியிடப்பட்டுள்ளது.[3] இரண்டாவது கட்டம் அசோகரின் காலத்திய கலை ஆகும். இது பொதுவாக அவரது கட்டளைகள் பொறிக்கப்பட்ட ஒற்றைக்கல் தூண்களில் பொதுவாகக் காணப்படுகின்றன. மேலும் மூன்றாம் கட்டம் செங்கல் மற்றும் கல் கட்டிடக்கலையின் தொடக்கமாகும். சாஞ்சியில் உள்ள அசல் தாதுகோபுரம், சாஞ்சியில் உள்ள சிறிய ஒற்றைக்கல் தண்டவாளம், பராபர் குகைகளில் உள்ள லோம ரிஷி குகை போன்றவை. அதன் அலங்கரிக்கப்பட்ட முகப்பில், மரக் கலையின் வடிவங்களை எதிரொலிக்கின்றன.[2]

மௌரியக் கலை கிரேக்க மற்றும் பாரசீகக் கலைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டது என்பதை பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.[4] ஏனெனில் கிரேக்க மற்றும் பாரசீகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான அரசியல் மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் தீவிரமாக இருந்தன. மேலும், இவை நீண்ட காலத்திற்கு தொடர்பில் இருந்தன. இது சிற்பத் துறையில் அவர்களின் முன்னேற்றங்களைப் பரப்புவதை ஊக்குவித்தது.[4]

சிற்பங்கள்

படிமம்:Rampurva bull capital detail.jpg
இராம்பூர்வாவில் காணப்படும் காளைத் தலை தூண்களில், சிறிய ரோஜா மலர்களால் சூழப்பட்ட தாமரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலம் இந்தியக் கல் சிற்பக்கலையில் ஒரு கற்பனையான மற்றும் ஈர்க்கக்கூடிய படியைக் குறித்தது-இதற்கு முந்தைய சிற்பங்கள் அநேகமாக மரங்களில் செதுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது தப்பிப் பிழைக்கவில்லை. அசோகரின் தூண்களிலில் எஞ்சியிருக்கும் விரிவான செதுக்கப்பட்ட விலங்குத் தலைகள் மிகவும் பிரபலமான படைப்புகள், எல்லாவற்றிற்கும் மேலாக, சாரநாத்திலிருந்து அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி, இப்போது இந்திய தேசிய இலச்சினையாக உள்ளது. வரலாற்று அறிஞர் ஆனந்த குமாரசுவாமி அரச கலைக்கும் மௌரியர் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கலைக்கும் இடையில் வேறுபாட்டைக் குறிப்பிடுகிறார். அரசவையில் காணப்படும் தூண்கள் அவற்றின் போதிகைகளால் குறிப்பிடப்படுகிறது.[5] மேலும் எஞ்சியிருக்கும் பிரபலமான கலை சில கல் துண்டுகள் மற்றும் சுடுமண்ணாலன பல சிறிய படைப்புகளால் குறிக்கப்படுகிறது.

அரசவை சிற்பத்தின் மிகவும் மெருகூட்டப்பட்ட மேற்பரப்பு பெரும்பாலும் மௌரிய மெருகூட்டல் என்றே அழைக்கப்படுகிறது. இருப்பினும், இது ஒரு மௌரியர் காலத்தை கண்டறியும் கருவியாக முற்றிலும் நம்பகமானதாகத் தெரியவில்லை. ஏனெனில் கணிசமாக பிற்காலத்திலிருந்தும் சில படைப்புகளும் இதே போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளன. கிபி 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இப்போது பெரும்பாலும் கருதப்படும் தீதார்கஞ்ச் யட்சினி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

தூண்களும் அவற்றின் போதிகைகளும்

படிமம்:Pataliputra capital, Bihar Museum, Patna, 3rd century BCE.jpg
பாடலிபுத்திர போதிகை, அகாமனிசிய மற்றும் கிரேக்க செல்வாக்கைக் காட்டுகிறது. ஆரம்பகால மௌரியர் காலம், கிமு 4ஆம்-3ஆம் நூற்றாண்டு.

கிமு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாடலிபுத்திர போதிகை, மௌரிய நகரமான பாடலிபுத்திரத்தில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இது பெர்சோ-அயனிய ஒழுங்கு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்ன கட்டிடக்கலை, மௌரிய அரசவையில் ஆரம்பத்திலிருந்தே அகாமனிசிய மற்றும் கிரேக்கக் கலை செல்வாக்கைக் குறிக்கிறது.[6][7]

படிமம்:Ashoka pillar at Vaishali, Bihar, India 2007-01-29.jpg
வைசாலியிலுள்ள ஒற்றை சிங்கப் போதிகை

பேரரசர் அசோகர் இந்தியா முழுவதும் மதத் தூண்களையும் அமைத்தார். இந்தத் தூண்கள் இரண்டு வகையான கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. சில மதுரா பிராந்தியத்தைச் சேர்ந்த சிவப்பு மற்றும் வெள்ளை மணற்கற்களால் ஆனவை. ஒருசில வாரணாசி அருகிலுள்ள சுனார் பகுதியில் வெட்டியெடுக்கப்பட்ட கருப்பு புள்ளிகளுடன் கூடிய வெளி மஞ்சள் நிற, நுண்ணிய துகள்கள் கொண்ட கடினமான மணற்கற்களால் ஆனவை. தூண் போதிகைகளில் உள்ள பாணியின் சீரான தன்மை, அவை அனைத்தும் ஒரே பிராந்தியத்தைச் சேர்ந்த கைவினைஞர்களால் செதுக்கப்பட்டவை என்பதைக் குறிக்கிறது. எனவே, மதுரா மற்றும் சுனாரில் இருந்து தூண்கள் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கு கல் கொண்டு செல்லப்பட்டதாகவும், இங்கே கல் வெட்டப்பட்டு கைவினைஞர்களால் செதுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.[5] மேலும், அவைகளுக்கு மௌரியச் சிற்பத்தின் சிறந்த மெருகூட்டல் பண்பு வழங்கப்பட்டது.

இந்த தூண்கள் முக்கியமாக சிந்து-கங்கைச் சமவெளிகளில் அமைக்கப்பட்டன. அவை தர்மம் அல்லது நீதி குறித்த அசோகரின் ஆணைகளுடன் பொறிக்கப்பட்டிருந்தன.[8] நேர்த்தியாக செதுக்கப்பட்ட உயிரோட்டமான விலங்கு போதிகைகளில், சாரநாத்தின் சிங்க போதிகை, ராம்பூர்வா போதிகைகள், மற்றும் லௌரியா நந்தன்காட்டிலுள்ள சிங்க போதிகை போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த போதிகைகளுக்கும் அக்காமனியப் படைப்புகளுக்கும் இடையிலான ஒற்றுமை குறித்து நிறைய ஊகங்களும் எழுப்பப்பட்டுள்ளன.

பிரபலமான சிற்பங்கள்

படிமம்:MauryaStatuettes.jpg
மௌரிய சகாப்தத்தின் சிலைகள்
படிமம்:Patna Yakshas and inscriptions.jpg
பாட்னாவில் கண்டுபிடிக்கப்பட்ட 2 மீட்டர் உயரமுள்ள இரண்டு யக்சர்கள் சிலை கிமு 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.[9][10]

உள்ளூர் சிற்பிகளின் படைப்புகள் மௌரிய காலத்தின் பிரபலமான கலையை விளக்குகின்றன. இது பேரரசரால் அநேகமாக நியமிக்கப்படாத சிற்பங்களைக் கொண்டிருந்தது. பிரபலமான கலையின் புரவலர்கள் உள்ளூர் ஆளுநர்களாகவும், மிகவும் திறமையான குடிமக்களாகவும் இருந்தனர். இது பெஸ்நகரின் பெண் உருவம், பார்கமின் ஆண் உருவம் மற்றும் தீதர்கஞ்சைச் சேர்ந்த மீசை தாங்குபவர் போன்ற நபர்களால் குறிப்பிடப்படுகிறது (இருப்பினும் அதன் வயது விவாதிக்கப்படுகிறது). தொழில்நுட்ப ரீதியாக அவை தூண் மூலதனங்களை விட குறைவான திறமையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை கணிசமான புவிசார் தன்மையையும் உடல் உயிர்ச்சக்தியையும் வெளிப்படுத்துகின்றன.[5]

கல் வளையங்கள்

படிமம்:Ringstone MET DT9196.jpg
நியூயார்க் பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள "நான்கு தெய்வங்களுடனும், நான்கு பேரீச்சை மரங்களுடனும் கூடிய வட்டக்கல்"[11]
படிமம்:MET 1987 142 374 O (cropped).jpg
நியூயார்க் பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள உடைந்த நிலையில் காணப்பட்ட பறவைகள், (அநேகமாக வாத்துகள்), ஆகியவற்றால் சூழப்பட்ட "தெய்வம்"[12]

மௌரியப் பேரரசு மற்றும் அதைத் தொடர்ந்து வந்த சுங்கப் பேரரசு (கிமு 187-78) காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு தனித்துவமான கலைப்பொருளும் சிறிய சிற்பமுமாகும். இவை பொதுவாக கிமு 3 அல்லது 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.[13] இவை டோனட் போல வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பக்கவாட்டு நேராகவும், அடிப்பகுதி தட்டையாகவும் சமமாகவும் இருக்கிறது. கல்லில் செய்யப்பட்ட இவற்றின் மேல் பக்கம் மிக நேர்த்தியாக புடைப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. மையத்தில் உள்ள துளையைச் சுற்றி பல வட்ட அலங்காரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 2.5 முதல் 4 அங்குல அகலம் கொண்டவை.[14]

ஓவியம்

மௌரியர்கள் சில தரமான ஓவியங்களைக் கொண்டிருந்தனர் என்பது மெகஸ்தெனஸின் கூற்றிலிருந்து தெளிவாகிறது. ஆனால் அவர்களின் எந்த ஒரு ஓவியமும் எஞ்சியிருக்கவில்லை. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இந்திய ஓவியத்தின் மிகப் பழமையான குறிப்பிடத்தக்க அஜந்தா குகைகளின் ஓவியங்கள், நன்கு வளர்ந்த ஒரு பாரம்பரியம் இருந்ததைக் காட்டுகின்றன. இது மௌரியர் காலத்திலிருந்து இருந்ததைக் காட்டுகிறது.

கட்டடக்கலை

படிமம்:Lomas Rishi entrance.jpg
பராபர் குகைகளிலுள்ள லோம ரிஷி குகை, கிமு 3ஆம் நூற்றாண்டு.

இந்தக் காலம் செங்கல் மற்றும் கல் பயன்பாட்டிற்கான இரண்டாவது மாற்றத்தைக் குறித்தாலும், மரமும் விருப்பமான பொருளாக இருந்தது. அர்த்தசாஸ்திரத்தில் கௌடில்யர் செங்கல் மற்றும் கல்லை அவற்றின் ஆயுளுக்கு பயன்படுத்த அறிவுறுத்துகிறார். ஆயினும்கூட, மரக் கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துக்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்புகளுக்கும் அவர் ஒரு பெரிய பகுதியை ஒதுக்கியுள்ளார். இது மரத்தின் பிரபலத்தை குறிக்கிறது.

 
சிதிலமைடைந்த 80 தூண்கள் கொண்ட மண்டபத்தின் மாதிரி வரைபடம்

கிரேக்க தூதர் மெகஸ்தெனஸ், தலைநகரான பாடலிபுத்திரம் ஒரு பெரிய மரத்தாலான பலகையால் சூழப்பட்டிருந்தது என்றும், அதில் துளைகள் அல்லது பிளவுகள் இருந்தன என்றும், அதன் வழியாக வில்லாளர்கள் சுட முடியும் என்றும் குறிப்பிடுகிறார். இது அறுபத்து நான்கு வாயில்களையும் 570 கோபுரங்களையும் கொண்டிருந்தது.[15]இசுட்ராபோவின் கூற்றுப்படி, அரண்மனையின் பளபளப்பான தூண்கள் தங்க கொடிகள் மற்றும் வெள்ளி பறவைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன என அறிய வருகிறது. மீன்கள் அடங்கிய குளங்களுடன் கூடிய பெரிய பூங்காவின் நடுவே அரண்மனை இருந்தது. பூங்கா பல்வேறு வகையான அலங்கார மரங்கள் மற்றும் புதர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இசுபூனர் மற்றும் வாடெல் ஆகிய இருவரும் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகள் பாடலிபுத்திரத்திலுள்ள புலந்தி பாக் பகுதியில் பெரிய மர அரண்களின் எச்சங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. கட்டிடங்களில் ஒன்றின் எச்சங்கள், கும்ஹராரில் பகுதியை அகழ்வாய்வு செய்த போது, மௌரியப் பேரரசு (கிமு322–185) காலத்திய தியான மண்டபக் கூரையின் மேற்பரப்பைத் தாங்கும் 80 தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அகழ்வாய்வில் பாடாலிபுத்திரத்தின் கும்ஹாரர் தொல்லியல் களம் கிமு 600 ஆண்டுகளுக்கு முந்தியது எனக் கண்டறிந்துள்ளனர்.[16] மேலும் கும்ஹரார் தொல்லியல் களம் மௌரியப் பேரரசர்களான அஜாதசத்ரு, சந்திரகுப்த மௌரியர் மற்றும் அசோகர் ஆகியவர்களின் பண்டையத் தலைநகரங்களாக விளங்கியது. கும்ஹரார் பகுதி கிமு 600 முதல் கிபி 600 முடிய புகழுடன் விளங்கியது.[17]

சாஞ்சி, சாரநாத் மற்றும் அமராவதி தாதுகோபுரம் போன்ற பல தாதுகோபுரங்கள் அசோகரின் ஆட்சியின் போது செங்கல் மற்றும் கொத்து மேடுகளாக கட்டப்பட்டன. பெரும்பாலானவை பல முறை புதுப்பிக்கப்பட்டன. இது அசல் கட்டமைப்புகள் பற்றிய ஒரு துப்பு கூட தற்போது நமக்கு இல்லை.

நாணயங்கள்

படிமம்:MauryanCoin.JPG
சக்கரம் மற்றும் யானையின் உருவங்களுடன் (கிமு 3ஆம் நூற்றாண்டு) கூடிய மௌரியப் பேரரசின் நாணயம்.

மௌரியர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் பெரும்பாலும் வெள்ளி மற்றும் பல்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் எடைகளில் சில செம்பு உலோகத் துண்டுகளாக இருந்தன. அவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. யானை, தண்டவாளத்தில் உள்ள மரம் மற்றும் மலை போன்றவை மிகவும் பொதுவான சின்னங்களாக உள்ளது. பொதுவாக, இத்தகைய நாணயங்களை உற்பத்தி செய்வதற்கான நுட்பம் பொதுவாக உலோகத்தை முதலில் வெட்டி, பின்னர் சாதனத்தை துளைப்பதாகும். இந்த சின்னங்கள் அரச சின்னத்தையோ அல்லது நாணயத்தை அச்சிட்ட உள்ளூர் சங்கத்தின் சின்னத்தையோ பிரதிநிதித்துவப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சில நாணயங்களில் (பணம் மாற்றும் அடையாளங்கள் அடையாளங்கள் இருந்தன. இவை பழைய நாணயங்கள் பெரும்பாலும் மீண்டும் வெளியிடப்பட்டன என்பதைக் குறிக்கின்றன.[18]

புகைப்படங்கள்

மேற்கோள்கள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


  1. Mahajan V.D. (1960, reprint 2007). Ancient India, New Delhi: S.Chand, New Delhi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0887-6, p.348
  2. 2.0 2.1 2.2 Introduction To Indian Art. 1923. p. 15.
  3. Kumar, Raj (2003). Essays on Indian Art and Architecture (in ஆங்கிலம்). Discovery Publishing House. p. 12. ISBN 978-81-7141-715-5.
  4. 4.0 4.1 V.D, Mahajan (2016). Ancient India (in ஆங்கிலம்). S. Chand Publishing. pp. 270–271. ISBN 9789352531325.
  5. 5.0 5.1 5.2 Thapar, Romila (2001). Aśoka and the Decline of the Mauryas, New Delhi: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564445-X, pp.267-70
  6. Report on the excavations at Pātaliputra (Patna); the Palibothra of the Greeks by Waddell, L. A. (Laurence Austine)
  7. Hellenistic Elements in the Sculptural and Terracotta Art of Mauryan Period by Vinay Kumar
  8. "India - Ashoka's Edicts, Mauryan Empire, Buddhism | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). 2024-10-02. Retrieved 2024-10-02.
  9. Ramaprasad, Chanda (1919). Indian Antiquary A Journal Of Oriental Research Vol.48. pp. 25-28.
  10. Report of a tour in Bihar and Bengal, p.3
  11. Lerner and Kossak, 50, their no. 2
  12. Lerner and Kossak, 50, their no. 4
  13. Lerner and Kossak, 48; Bennett (2017); V&A
  14. Lerner and Kossak, 48-50; V&A. They may also be called "ring stones" or "ring-stones"
  15. Mahajan V.D. (1960, reprint 2007). Ancient India, New Delhi: S.Chand, New Delhi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0887-6, p.281
  16. Ancient city of Pataliputra பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம் பட்னா Official website.
  17. Mahajan V.D. (1960, reprint 2007). Ancient India, New Delhi: S.Chand, New Delhi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0887-6, p.349
  18. Thapar, Romila (2001). Aśoka and the Decline of the Mauryas, New Delhi: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564445-X, p.289

நூலாதாரங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மௌரியக்_கலை&oldid=478943" இலிருந்து மீள்விக்கப்பட்டது