திரயோதசி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Alangar Manickam பயனரால் செய்யப்பட்ட 17:13, 21 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
திரயோதசித் திதியைக் குறிக்கும் கோணம் செம்மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

திரயோதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதின்மூன்றாவது திதி திரயோதசி ஆகும். திரயோதச எனும் வடமொழிச் சொல் பதின்மூன்று எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதிமூன்றாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதின்மூன்றாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் பதின்மூன்றாம் நாளுமாக இரண்டு முறை திரயோதசித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் திரயோதசியைச் சுக்கில பட்சத் திரயோதசி என்றும், பூரணையை அடுத்த திரயோதசியைக் கிருட்ண பட்சத் திரயோதசி என்றும் அழைக்கின்றனர்.

வானியல் விளக்கம்

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.[1] திரயோதசித் திதி பதின்மூன்றாவது திதியும் 28 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 144 பாகையில் இருந்து 156 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்சத் திரயோதசித் திதியும், 324 பாகையிலிருந்து 336 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்சத் திரயோதசியும் ஆகும்.

காண்க

ஆதாரம்

  1. Sharma, P.D., 2004. பக். 22.

உசாத்துணைகள்

  • இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்றம், 2006.
  • திரவியம், மு., இந்துசமயக் களஞ்சியம், திருமகள் நிலையம், 1995.
  • Balachandra Rao, S., Indian Astronomy: An Introduction, University Press (India) Private Limited, 2002.
  • Sharma, P. D., Hindu Astronomy, Global Vision Publishing House, 2004.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=திரயோதசி&oldid=396481" இலிருந்து மீள்விக்கப்பட்டது