விக்ரம் நாட்காட்டி
விக்ரம் நாட்காட்டி (விக்ரம் சம்வாட், அல்லது பிக்ரம் சம்பாத்), (தேவநாகரி:विक्रम संवत) இந்திய பேரரசன் விக்ரமாதித்தியன் நிறுவிய நாட்காட்டியாகும். நேபாளத்தின் அலுவல்முறை நாட்காட்டியாகவும் இந்தியாவில் பலரும் பாவிக்கும் நாட்காட்டியாகவும் உள்ளது. நேபாளத்தில் விக்ரம் சம்வாத் தவிர அங்கு பழங்காலத்தில் நிலவிய நேபாள் சம்பாத்தும் கிரெகொரியின் நாட்காட்டியும் அங்கு பயன்படுத்தப்படுகிறது.
சந்திரகுப்த விக்கிரமாதித்தனால் நிறுவப்பட்டதாக எண்ணப்படும் பொதுவான கருத்துக்கு மாறாக, உண்மையில் இந்த நாட்காட்டி உஜ்ஜைனை ஆண்டுவந்த விக்கிரமாதித்தனால் கி.மு 56ஆம் ஆண்டில் அவன் சகா வம்சத்தவர்களை வெற்றி கண்டதைக் கொண்டாடும் வகையில் நிறுவப்பட்டது.[1]. இது சந்திர நாட்காட்டியை பின்பற்றிய இந்து நாட்காட்டியாகும். விக்ரம் நாட்காட்டி 56.7 ஆண்டுகள் சூரிய நாட்காட்டியான கிரெகொரியின் நாட்காட்டியை விட கூடுதலாகும்.காட்டாக,விக்ரம் சம்வாட் 2056 கிரெகொரியின் நாட்காட்டியில் கி.பி 1999 ஆண்டு துவங்கி 2000ஆம் ஆண்டு முடிவடைந்தது. வட இந்தியாவில் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் துவங்கும் சைத்ரா மாதத்தின் அமாவாசையன்று ஆண்டு துவங்குகிறது.
ஆண்டுகளின் ஒப்பீடு
வானியலிலும் அன்றாட வாழ்விலும் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான ஆண்டுகளின் ஒப்பீடு கீழே தரப்பட்டுள்ளது. பொதுவான பயன்பாட்டில் உள்ளவை அட்டவணையின் மேல்பகுதியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
| ஆண்டு வகை | ஆங்கிலத்தில் | கால அளவு (நாட்கள்) | விளக்கம் |
|---|---|---|---|
| சாதாரண ஆண்டு | Common Year | 365 | பிப்ரவரி 28 நாட்களைக் கொண்ட ஒரு சாதாரண நாட்காட்டி ஆண்டு. |
| நெட்டாண்டு (லீப் ஆண்டு) | Leap Year | 366 | பருவகாலங்களுடன் நாட்காட்டியை இணைக்க ஒரு கூடுதல் நாள் (பிப் 29) சேர்க்கப்படும் ஆண்டு. |
| கிரெகொரியின் ஆண்டு | Gregorian Year | 365.2425 | நவீன நாட்காட்டியின் சராசரி ஆண்டு நீளம். |
| சூரிய ஆண்டு | Solar Year | ~365.242 | பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் பொதுவான காலம். (வெப்பமண்டல ஆண்டைக் குறிக்கும்.) |
| வெப்பமண்டல ஆண்டு | Tropical Year | 365.24219 | இரு அடுத்தடுத்த வசந்தகால சம இரவுப் பகல் நிலைகளுக்கு இடைப்பட்ட காலம் (பருவக்காலங்களின் அடிப்படை). |
| விண்மீன் ஆண்டு | Sidereal Year | 365.25636 | நிலையான விண்மீன்களைப் பொறுத்து பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம். |
| ஜூலியன் ஆண்டு | Julian Year | 365.25 | வானியலில் ஒளியாண்டு போன்றவற்றை கணக்கிடப் பயன்படும் நிலையான அலகு. |
| சந்திர ஆண்டு | Lunar Year | ~354.37 | 12 முழு நிலவுச் சுழற்சிகளைக் (Synodic months) கொண்ட காலம். (சூரிய ஆண்டை விட சுமார் 11 நாட்கள் குறைவு). |
| அண்மைநிலை ஆண்டு | Anomalistic Year | 365.25964 | பூமி சூரியனுக்கு மிக அருகில் வரும் நிலையிலிருந்து அடுத்த அதே நிலை வரையிலான காலம்(Perihelion). |
| கிரகண ஆண்டு | Eclipse / Draconic Year | 346.62007 | சூரியன் மீண்டும் அதே நிலவுக்கணுவை (Lunar node) வந்தடைய ஆகும் காலம். (கிரகண காலங்களை கணிக்க பயன்படும்). |
| சோதிக் ஆண்டு | Sothic Year | ~365.25 | சிரியசு (Sirius) விண்மீன் மீண்டும் தோன்றும் இடைவெளி (பண்டைய எகிப்து முறை). |
| பெஸலியன் ஆண்டு | Besselian Year | ~365.2422 | ஒரு குறிப்பிட்ட சூரிய தீர்க்கரேகையை அடிப்படையாகக் கொண்ட பழைய வானியல் அளவு. |
| காசியன் ஆண்டு | Gaussian Year | 365.25690 | காசியன் ஈர்ப்பு மாறிலியை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவார்த்த ஆண்டு. |
| விண்மீன் மண்டல ஆண்டு | Galactic Year | ~22.5 - 25 கோடி ஆண்டுகள் | சூரிய குடும்பம் பால்வெளி மண்டலத்தின் மையத்தை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம். (பிரபஞ்ச ஆண்டு / பால்வெளி ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது). |
மேற்கோள்கள்
- ↑ The cyclopædia of India and of Eastern and Southern Asia by Edward Balfour, B. Quaritch 1885, p502