சங்கீத சபா தமிழ்ப்பள்ளி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சங்கீத சபா தமிழ்ப்பள்ளி
SJK(T) Perak Sangeetha Sabah
அமைவிடம்
புந்தோங், ஈப்போ, மலேசியா
தகவல்
வகைஇரு பாலர் பள்ளி
தொடக்கம்1902
பள்ளி மாவட்டம்கிந்தா மாவட்டம்
கல்வி ஆணையம்மலேசியக் கல்வி அமைச்சின் பகுதி உதவி
பள்ளி இலக்கம்ABD2161
தலைமை ஆசிரியர்திருமதி.பத்மினி

தரங்கள்1 முதல் 6 வகுப்பு வரை
மாணவர்கள்193
கல்வி முறைமலேசியக் கல்வித்திட்டம்

மலேசியா பேராக், ஈப்போ, புந்தோங் சுங்கைப் பாரி சாலையில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த பள்ளி சங்கீத சபா தமிழ்ப்பள்ளி. இப்பள்ளி 1902 ஆம் ஆண்டு கட்டப் பட்டது. சங்கீத சபா தமிழ்ப்பள்ளி பேராக் மாநிலத்திலேயே பழைமையான தமிழ்ப்பள்ளி. அரசாங்கத்தின் பகுதி உதவி பெற்று வரும் தமிழ்ப்பள்ளிகளில் இதுவும் ஒன்று. இப்பள்ளி மலாயா இரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாகப் பள்ளிக்கூடத்திற்கு நிலம் வழங்குவதில் மலாயா இரயில்வே துறை மறுப்பு தெரிவித்து வந்தது. ஆனால் அதே இடத்தில் தமிழர்கள் 100 ஆண்டு காலம் வாழ்ந்து இருக்கிறார்கள்.

டத்தோ ஸ்ரீ சாமிவேலு, டத்தோ இராஜு அவர்களின் அணுகுமுறையின் காரணமாக மலாயா இரயில்வே துறை இணக்கம் தெரிவித்தது. 2010 ஆம் ஆண்டில் ஒரு புதிய கட்டடம் உருவாக்கப் பட்டது. இப்போது அப்பள்ளியில் 193 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

வரலாறு

சங்கீத சபா தமிழ்ப்பள்ளி நாடு முழுமையும் நன்கு அறியப் பட்ட ஒரு தமிழ்ப்பள்ளி. 1900-ஆம் ஆண்டுகளில் இரயில்வே துறையில் வேலை செய்ய நூற்றுக் கணக்கான தமிழர்கள் ஈப்போ சுங்கைப்பாரி பகுதிக்கு வந்தனர்.

சுங்கை பாரி எனும் கிராமப் பகுதி குந்தோங் புறநகர்ப் பகுதியில் இருந்தது. இரயில்வே துறையில் வேலை செய்ய வந்தவர்களில் இலங்கைத் தமிழர்களும் இருந்தனர். அந்தக் கால கட்டத்தில் அவர்ளுடைய பிள்ளைகள் படிக்க ஒரு தமிழ்ப்பள்ளி தேவைப் பட்டது.

தமிழார்வம் கொண்ட தமிழர்கள்

அதனால் தமிழார்வம் கொண்ட தமிழர்கள் ’ஜெல்ப்’ சாலையில் இருந்த ஒரு கடையை வாடகைக்கு எடுத்தனர். ’ஜெல்ப்’ சாலை என்பது சர். ஏ.எப்.ஜெல்ப் என்பவரின் பெயரில் உருவான பெயர். இவர் 1914-ஆம் ஆண்டு கிந்தா மக்கள் நலத் துறைத் தலைவராக இருந்தவர். பின்னர் ஜமெய்க்கா நாட்டிற்கு அவர் தலைமைச் செயலாளராக அனுப்பப் பட்டார். இந்தச் சாலை சிலிபின் சாலையில் இருந்து மேடான் கிட் போகும் பகுதியில் இருக்கிறது.

அந்த ’ஜெல்ப்’ சாலைக் கடையில் தமிழ் வகுப்புகளை நடத்தினர். சற்று வசதி படைத்தவர்களும் ஆங்கிலேய மோகம் கொண்டவர்களும் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பவில்லை.

அருகாமையில் உள்ள செயிண்ட் மைக்கல் பள்ளி, ஆங்கிலோ சீனப் பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பினர். தமிழ் மொழியின் மீது இருந்த பற்றுதலின் காரணமாகப் பலர் தங்கள் பிள்ளைகளைச் சங்கீத சபா தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வந்தனர். இந்த மொழிப் பற்றுதல் இன்னும் இப்பகுதியில் வாழும் தமிழ் மக்களிடையே வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.

அந்த மொழிப் பற்றுதலினால் புந்தோங் புதுக் கிராமத்தில் மட்டும் நான்கு தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. 1934 ஆம் ஆண்டு நல்ல உள்ளம் கொண்ட சிலரின் நன்கொடையினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் ஒரு புதிய பள்ளிக்கூடம் உருவாக்கப் பட்டது.

இசை வகுப்புகள்

தொடக்கக் காலத்தில் இப்பள்ளியில் இரயில்வே குடியிருப்புப் பிள்ளைகளும், சுற்று வட்டாரத்தில் உள்ள தமிழ்ப் பிள்ளைகளும் கல்விப் பயின்றனர். மாலை வேளைகளில் இசை வகுப்புகளும் நடத்தப்பட்டன. இசை வகுப்புகள் நடத்தப் படுவதற்காகவே சங்கீத சபா தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டதாகவும் சிலர் சொல்வது உண்டு. சங்கீத கலா தமிழ்ப் பள்ளியில் இசை வகுப்புகள் நடைபெற பலர் பற்பல அரிய சேவைகளைச் செய்துள்ளனர்.

இசை வகுப்பு சிறப்பாக நடைபெற ஏற்பாட்டுக் குழுவினர் வீடு வீடாகச் சென்று உந்துவண்டிகளில் பிள்ளைகளை ஏற்றி வந்தனர். இக்குழுவின் ஒற்றுமை உணர்வும், தன்னலமற்ற தொண்டுணர்வும் போற்றத்தக்கது. பள்ளியின் கல்வித் தரமும் இசைக்கலையும் நல்ல வளர்ச்சிக்கண்டது.

1942 ஆம் ஆண்டில் இருந்து 1945 ஆம் ஆண்டு வரையிலான ஜப்பானியர் ஆட்சி காலத்தில் சங்கீத கலா தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சி சற்றே தடைப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அருகாமையில் இருந்த செயிண்ட் பிலோமினா தமிழ்ப்பள்ளியில் ஜப்பானிய வகுப்புகள் நடைபெற்றன.

டத்தோ ஸ்ரீ சாமிவேலு

1974 ஆம் ஆண்டு இப்பள்ளி அரசாங்கத்தின் முழு உதவி பெறும் பள்ளியாகத் தகுதி உயர்வு பெற்றது. இப்பள்ளியில் படித்து பட்டம் பெற்று உயர் பதவிகளில் பணிபுரியும் பலர் உள்ளனர். பேராக் மாநில கல்வி இலாகாவில் பணிபுரியும் முனைவர் சாமிக்கண்ணு, பள்ளியின் முன்னாள் முதல்வர் பாலசுப்ரமணியம், மகப்பேறு நிபுணர் டாக்டர் ஜெயபாலன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

புதிய கட்டடம் கட்டப் படுவதற்கு பல எதிர்ப்புகள் வந்தன. மலாயா இரயில்வே துறை இடம் தர முடியாது என்று முதலில் மறுத்தது. அந்த எதிர்ப்புகளைச் சமாளிக்க மலேசியத் தமிழ்ச் சமுதாயம் ஒன்றாகத் திரண்டு செய்த போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

தனிமனிதர்களில் டத்தோ ஸ்ரீ சாமிவேலு, டத்தோ இராஜு, டத்தோ வீரசிங்கம் போன்றவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகள் மறக்க முடியாதவை. அரசாங்கத்திடம் இருந்து 20 இலட்சம் ரிங்கிட் பெறுவதற்கு இவர்கள் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டனர்.

புதிய பள்ளி

இருபது இலட்சம் ரிங்கிட் செல்வில் சங்கீத சபா பள்ளியின் புதிய கட்டடம் கட்டப் பட்டுள்ளது. கட்டுமான வேலைகள் 2008 ஆம் ஆண்டில் தொடங்கி 2010 ஆண்டில் முடிவடைந்தன. நான்கு மாடிகளைக் கொண்ட இப்பள்ளியில் 9 வகுப்புகளும் 3 சிறப்புக் கூடங்களும் உள்ளன.

புதிய பள்ளி கட்டப் படும் போது சங்கீத சபா பள்ளியில் பயின்ற மாணவர்கள் 150 பேரும் அருகில் உள்ள புந்தோங் தேசிய பள்ளிக்குத் தற்காலிகமாகப் பள்ளி மாற்றம் செய்யப் பட்டனர். பள்ளி மாணவர்கள் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இப்போது சங்கீத சபா பள்ளியின் தலைமை ஆசிரியையாக திருமதி.டி.பத்மினி இருக்கின்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக ஆர்.கிருஷ்ணன் அரிய சேவைகளைச் செய்து வருகின்றார்.


மேற்கோள்கள்