ஆறு அழகப்பன்
Jump to navigation
Jump to search
ஆறு. அழகப்பன் (ஆகஸ்டு 10, 1937) என்பவர் தமிழ் அறிஞர், நூலாசிரியர் நாடகாசிரியர், ஆய்வாளர், செயற்பாட்டாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர் ஆவார். சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடியில் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகத் தொடங்கி இந்திய மொழிப்புலத் தலைவர் வரை 38 ஆண்டுகள் பணி புரிந்து ஒய்வு பெற்றவர்.
பணிகள்
- ஆறு.அழகப்பன் நாட்டுப் புற இயலில் எம்.லிட் பட்டம் பெற்றார். பின்னர் நாடகத்துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். நாடகக் கலை என்னும் பெயரில் ஓர் இதழை நடத்தினார். அவ்வை தி.க.சண்முகம் மணி விழா நடந்தபோது தமிழ் நாடகக் கண்காட்சி ஒன்றை நடத்தினார்.
- பாரதிதாசனின் நூறு பாடல்களை இந்தி மொழியில் மொழியாக்கம் செய்வித்துப் பல்கலைக் கழகம் வழியாக வெளியிட முன்னின்றார்.
- உரையாசிரியர்கள் பலரை நியமனம் செய்து பன்னிரு திருமுறைக்கு உரை எழுத வைத்தார்.
- ம.பொ .சிவஞானம் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலையும் மு. கருணாநிதி எழுதிய குறளோவியம் என்னும் நூலையும் மொழியாக்கம் செய்து வெளியிட துணையாக நின்றார்.
- தமிழ் அறிஞர் இரா.இராகவையங்கார் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய குறுந்தொகை ஆராய்ச்சி என்னும் நூல் வெளிவராமல் இருந்த நிலையில் அவருடைய பெயரரிடமிருந்து அதன் கைப் பிரதியை பெற்று வெளியிட்டார்.
- காசியில் பல மொழி அறிஞர்களை அழைத்து திருக்குறள் தேசிய மாநாடு கருத்தரங்குகள் நடத்தினார்.
- ரிசிகேசியில் மாநாடு நடத்தி திருவள்ளுவர் சிலையும் அமையக் காரணமாக இருந்தார். அண்ணாமலை நகரில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தினார்.
- தமிழைச் செம்மொழி என்று அறிவிக்க வேண்டும் என்று பிற தமிழ் அறிஞர்களுடனும் தமிழ் அமைப்புகளுடனும் இணைந்து போராடினார்.
- தமிழ்ச் சுரங்கம் என்னும் அமைப்பின் வாயிலாக தமிழ்த் தொண்டு ஆற்றுவோருக்கு தமிழ் மாமணி பட்டம் அளித்து விழா நடத்தி வருகிறார்.
படைப்புகள், விருதுகள்
ஆறு அழகப்பன் நாடக நூல்கள் 10, திறனாய்வு நூல்கள் 10 கட்டுரை வரலாற்று நூல்கள் 6 மற்றும் தாலாட்டுப் பாடல் தொகுப்பு நூல் ஒன்றும் எழுதியுள்ளார். இவருடைய நாடகத் துறைப் பணியைப் பாராட்டி கலைமாமணி விருதை தமிழக அரசு வழங்கி சிறப்பித்தது. இது போல் பல விருதுகளை பிற அமைப்புகள் வழங்கியுள்ளன
சான்று
முகம் இதழ் ஆகத்து 2000