ஒரு புளியமரத்தின் கதை
ஒரு புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமியின் முதல் நாவல். அவரது குறிப்பிடத்தக்க புதினங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1966ம் ஆண்டு முதலில் வெளியான இப்புதினம் பல முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. மலையாளம், இந்தி, எபிரேயம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1958ல் சரசுவதி இலக்கிய இதழுக்காக இதனை சுந்தர ராமசாமி எழுதத் தொடங்கினார். ஆனால் நான்கைந்து இதழ்கள் வெளியான பின்னர் சரசுவதி இதழ் வெளியாவது நின்று போனதால், இப்புதினமும் நின்றது. மீண்டும் முழுப்புதினம் 1966ம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டது. இது எபிரேய மொழியில் நேரடியாக,Sipuro shel Ets Hatamarhindi[1] என்று Dr. Ronit Ricci என்பவரால்,[2][3] தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட முதல் நூல் ஆகும். அதுபோலவே, அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய நூலும் இதுவே ஆகும். [4]
புதின மதிப்புரை
விடுதலைப் பெற்ற இந்தியாவிற்கு முன்னரும் பின்னரும் நகரும், ஒரு புளியமரத்தை கதையாகும். மிக யதார்த்தமான, பழைய எழுத்துநடை. அம்மரம் நீங்கும் பொழுது மனம் அழுதது. மனிதன், தனக்கும், தன்னைச் சுற்றியுள்ள உயிர்களுக்கும் துயரைக் கொடுக்கிறான். ஆனால், இயற்கையோ, தம் இயல்பிலிருந்து வேறுபடுவது இல்லை;வெவ்வேறு காலகட்டத்தில், பலரும் அம்மரத்தால் அடைந்த நன்மைகள் அழகுற விளக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
புகழ் என்பது தான் என்ன? நமக்கு தெரியாதவர்களும் நம்மை தெரிந்து வைத்திருப்பதிலுள்ள சுகம் தானே? அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். அபார சுகம் தான் அது. சந்தேகமே இல்லை. ரோட்டில் நடந்து செல்லும் போது தன்னை சுட்டி காட்டி இன்னார் என குசுகுசுத்து அறிமுகப்படுத்தும் குரல் காதில் விழுந்தும் விழாத பாவனையில் சென்று விடுகிற சுகம் லேசானதா? ”
“சொந்த விஷயம் பேசுவது என்றால் எல்லாருக்கும் வெல்லம் தான்!”
” பழைய நண்பர்கள் எல்லாரும் விடல் தேங்காய் மாதிரி ஊர் ஊராக சிதறி போய் விட்டனர். எட்டு திசைகளிலிருந்தும் பிழைப்பின் கொடிய கரங்கள் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அமுக்கி கொண்டு விட்டன”.
“வாழ்வில் இன்பகரமான நாட்கள் மிக குறைந்த நாட்கள் தானே! வேகமாக மறைந்து விடும் நாட்களும் அவை தானே!"
"அப்படியானால் கடைசிவரையிலும் இவர்களுடைய முணுமுணுப்பும் பின்னாலிருந்து எழுந்துகொண்டுதான் இருக்கும் போலிருக்கிறது . ரொம்பவும் அனாதியான முணுமுணுப்புதானே இது . இந்த முணுமுணுப்பை நின்று கேட்க ஓடும் உலகம் என்றாவது அக்கறை செலுத்தியதுண்டா ? காலத்தின் ரகசிய அறைகளில் சுருள் விரியும் புரட்சிக் கோலங்கள் எல்லோரையும் பின்தங்க அடித்துவிடும் போலிருக்கிறது. புரட்சிவாதியும் காலத்தின் வேகத்தில் பின்தங்கி, புதிய புரட்சிவாதிகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிச் சாகிறான். இருந்தாலும் காற்றின் வேகத்துக்கு அனுசரனையாகச் சிறுவன் பரம உற்சாகத்தோடு நூலை சரசரவென்று விட்டுக்கொடுக்கிறபொழுது தனது பாரத்தால் கொஞ்சம் கீழே இழுக்கும் வால்தான் பட்டத்தைக் கரணம் அடிக்கவிடாமல் காப்பாற்றுகிறது என்று தோன்றுகிறது. "
சான்றுகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2008-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-12-02.
- ↑ https://researchers.anu.edu.au/researchers/ricci-r
- ↑ எழுத்தாளர் சுஜாதாவின், கற்றதும் பெற்றதும் தொடரில், இதுபற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-10. பார்க்கப்பட்ட நாள் 2016-12-02.