கவிக்குயில் (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கவிக்குயில் என்பது தமிழ் நாட்டில் இருந்து மாத இதழாக வெளிவந்த ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும்.

வரலாறு

கவிஞர் டாக்டர் ஆனைவாரி ஆனந்தன் முதலில் மகரந்தம் என்ற கையெழுத்துப் பத்திரிகையைத் துவக்கினார். ’சூல். 1. தாது-1’ என்று கணக்கிட்டு எழுதிய அவர் 1983 செப்டம்பரில் அதை ’தட்டச்சு உருட்டுப்படி’ (டைப்ட் சைக்ளோஸ்டைல் ) ஏடு ஆக மாற்றினார். அடுத்து அதன் பெயரை சுகந்தம் என்றாக்கி தட்டச்சு பத்திரிகையாக வெளியிட்டார். 1983 நவம்பரில் ககந்தம் அச்சுப் பத்திரிகையாக வளர்ச்சி பெற்றது. ஆசிரியர் : சி. பன்னீர்செல்வம். சிறப்பாசிரியர் : கவிஞர் ஆணைவாரி ஆனந்தன் ஆவார். ‘சுகம்-1 மணம்-1‘ என்ற ரீதியில் எண்ணிக்கை வளர்த்த அது செய்திகள், சிந்தனைகள், துணுக்குகள், மாணவர் படைப்புகள், வாசகர் கடிதங்கள், கேள்வி- பதில் முதலியவற்றை வெளியிட்டது. ‘ஊர்ச்சூழல்‘ என்ற தலைப்பில் கிராமியப் பிரச்னைகளை அலசியது. இப் பத்திரிகை வெளியீட்டாளர்கள் மீண்டும் பெயர் மாற்றம் செய்தார்கள். 1984 திசம்பர் முதல் பத்திரிகை கவிக்குயில் என்ற பெயரைப் பெற்று, குயில்-1, கீதம்-1 என்று கணக்கிட்டு வெளி வந்தது.[1]

உள்ளடக்கம்

நடந்தவை, நடப்பவை என்ற பகுதியில் செய்திகள் இடம் பெறுகின்றன. சமுதாய வீதியிலே என்ற பகுதியில் ஊர்ப் பிரச்னைகள் கவனிக்கப்படுகின்றன. மகளிர் இயல் என்று பெண்கள் பகுதி உள்ளது. அறிவியல் சிந்தனைகள், ‘தத்துவப் பாதையில்‘ என்று சிந்தனைக் கட்டுரைகளும், கலைப்பூங்காவில் திரைப்படம் குறித்து செய்திகள், நூல் மணம் என்ற பகுதியில் புத்தக மதிப்புரைகள் வெளியாயின. கவிமலர்கள் என்ற தலைப்பில் புதுக் கவிதைகளும், ஆனைவாரி ஆனந்தன் எழுதும் கவிதைகளும் தொடர்கதையும், வேறு ஒரு தொடர்கதையும் சிறுகதையும் இதில் வெளியாயின. உடல் நலம் காப்போம் என்று ஆரோக்கியக் குறிப்புகளும் அவ்வப்போது இடம் பெற்றன. ‘வழக்கியல்‘ என்று சட்ட ஆலோசனைகள் கூறும் ஒரு பகுதியும், ‘நமக்குள்ளே‘ என்ற கேள்வி பதில் பகுதியும் கவிக்குயிலில் இடம்பெற்றன.[1]

குறிப்புகள்

  1. 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 281–283. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.