சக்தி (இதழ்)
சக்தி என்பது 1940களில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ் மாத இதழாகும். இதன் ஆசிரியர் வை. கோவிந்தன், இவர் மலேசியாவில் தன் செய்த வட்டித் தொழில் பிடிக்காமல் சொந்த நாட்டுக்குத் திரும்பினார், இதழ் தொழிலில் எந்தவித அனுபவம் இல்லாமல் தன் வியாபார அறிவு ஒன்றைக் கொண்டு இந்த இதழை 1939ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஆரம்பித்தார். இது விளம்பரங்கள், கட்டுரைகள், அரிய புகைப்படங்கள், கதை, கவிதை, துணுக்கு என அதிக பக்கங்களில் வெளியிட்டது.
துவக்கத்தில், 'டைம்' இதழ் அளவிலும் அமைப்பிலும் இது வந்து கொண்டிருந்தது. பிறகு புத்தக வடிவம் பெற்றது. கனத்த அட்டையுடன், வெள்ளைத் தாளில் அச்சில் வந்த 'சக்தி' ஒரு சில கதைகள், ஒன்றிரண்டு கவிதைகளோடு, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பாணியில் பலசுவைக் கட்டுரைகளையும், அறிவு தொடர்பான விசயங்களையும், துணுக்குகளையும் சேகரித்து வழங்கியது. வெகு காலம்வரை தி. ஜ. ர. (தி. ஜ. ரங்கநாதன்) இதன் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். அவருக்குப் பிறகு சுப. நாராயணன் என்ற எழுத்தாளர் இதன் ஆசிரியராகச் செயலாற்றினார். சில வருடங்களுக்குப் பின்னர் கு. அழகிரிசாமியும் தொ. மு. சி. ரகுநாதனும் பொறுப்பேற்று ‘சக்தி' பத்திரிகையை உருவாக்கி வந்தனர். காலப்போக்கில், 'சக்தி' இதழ் நிறுத்தப்பட்டது.[1]
இந்த இதழ்களில் சில தமிழம் "நாள் ஒரு நூல்" திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
வரலாறு
1930ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றபோது, ஆங்கிலேய அரசாங்கம் இதற்கு மக்கள் அணி திரள கூடும் என்பதால் போராட்டத்தை ஒடுக்க கடும் நடவடிக்கையை எதிர்ப்பாளர்கள் மீது எடுத்தது. இதனால் விடுதலைப் போராட்டத்தில் தளர்ச்சி ஏற்பட்டது, இத்தளர்ச்சியை சமாளிக்க மக்கள் உள்ளங்களில் விடுதலைக் உணர்ச்சியை ஏற்படுத்த இதழ்கள் பெரிதும் உதவும் என்று சிலர் முயன்றனர். இதன் விளைவு 30களில் தமிழில் காந்தி, சுதந்திரச் சங்கு, மணிக்கொடி, தினமணி போன்ற இதழ்கள் தோன்றின, இதைத் தொடர்ந்து வை. கோவிந்தன் என்பவரால் மக்களிடையில் விடுதலை உணர்ச்சியை ஏற்படுத்தவும், காந்திய கொள்கையை பரப்பவும் இந்த இதழை 1939 ஆகத்து மாதத்தில் தொடங்கப்பட்டது.
தொடக்கத்தில் ஆறு இதழ்கள் ஒரு மலர் என்றும், பின்னர் 12 இதழ்கள் ஒரு மலர் என்றும் காணப்பட்டுள்ளன. இடையில் சில இதழ்கள் வராமல் போனால் அடுத்த வந்த இதழ் இரண்டு மாதங்களுக்கு அல்லது மூன்று மாதங்களுக்கு இணைந்த ஒரே இதழாகக் கணக்கிடப்பட்டது. திசம்பர் 1951 முதல் அக்டோபர் 1953 வரை சக்தி இதழ் வெளிவராமல் இருந்தது. நவம்பர் 1953 முதல் ஏப்ரல் 1954 வரை மறுபடியும் வெளிவந்தன. மார்ச் 1950க்கு பிறகு, பத்திரிகைக் காகிதக் கட்டுப்பாட்டுச் சட்டம் வந்ததை ஓட்டி, இதழாக வராமல் நூலாக சக்தி வந்தது. [2]
சிறப்புகள்
இந்த இதழ் ஆங்கில மாதங்களையும் ஆண்டுகளையும் முன் அட்டையில் குறிப்பிடாமல், பின் அட்டையில் ஆங்கில மாதத்தோடு ஆண்டும் குறிப்பிட்டு வெளிவந்தது. முன் அட்டையில் தமிழ் ஆண்டோடு தமிழ் மாதங்களின் பெயருடன் வெளிவந்தது.
மேற்கோள்கள்
- ↑ வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 44–54. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
- ↑ மா. இரா. அரசு, இ. சுந்தரமூர்த்தி (1999). இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள்: தொகுதி 2. சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். p. 277-85.