செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் சங்ககாலப் புலவர். அகநானூறு 177 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகையில் இடம் பெற்றுள்ளது.

புலவர் பெயர் கொற்றனார். இவரது தந்தை பெயர் சாத்தன். இளம்பொன் என்பது தங்கம். இவர்கள் இருவரும் போன்னணி வினைஞர்களாகவும், வணிகர்களாகவும் விளங்கியவர்கள். இவர்கள் வாழ்ந்த ஊர் செயலூர்.

பாடல் சொல்லும் செய்தி

இன்னும் வாரார். இனி என் செய்கோ? என வருந்தாதே. உன் ஆகத்து எழுதிய தொய்யிலை நினைத்து வந்துவிடுவார் என்று சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

ஒருங்கு பிணித்து இயன்ற வெறி கொள் ஐம்பால்

ஐந்து கால் எடுத்துப் பின்னப்பட்ட சடை ஐம்பால். எண்ணெய் பூசப்பட்ட மணத்துடன் இது யானையின் கை போல் இருந்ததாம். இந்தப் பாடல்தலைவியின் கூந்தல் இப்படி இருந்ததாம்.

அயிரி ஆற்று அடைகரை

கழையும், வழையும் வாடக் கதிர் காய்ச்சுமாம். கருவுற்ற பெண்மயில் பாகல் பழத்தை விரும்பி யாழ் போல அகவுமாம். இலைதழைகள் மிகுந்த அயிரி ஆற்றுப் படுகையிலேயே இந்த நிலையாம். இந்த அயிரியாற்றைத் தாண்டி அவர் பொருள்செயச் சென்றாராம்.

பண்ணன் ... மாமரம்

கழற்கால் பண்ணன் காவிரியின் வடகரையிலிருந்த (சிறுகுடி) ஊரில் வாழ்ந்தவன். அவனது குளக்கரையில் இருந்த மாவின் தளிர் போன்ற மேனியை உடையவளாம் இப் பாடல் தலைவி.