செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

செல்லூர்க் கோசிகன் கண்ணனார் சங்ககாலப் புலவர். அகநானூறு 66 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவரால் பாடப்பட்டதாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இவரது ஊர் செல்லூர்.

பாடல் சொல்லும் செய்தி

பரத்தையிடம் சென்றவந்த தலைமகனை ஏற்றுகொள்ளுமாறு தோழி வேண்டத் தலைமகள் இவ்வாறு சொல்கிறாள்.

தோழி! அன்று நாம் கழங்கு விளையாடியபோது, நம் ஆயத்துக்குள் புகுந்து நமக்கு அருளிய பழங்கண்ணோட்டத்தை மறந்துவிட்டான். சிறுவர்ப் பயந்த செம்மலோன் என்று உலகம் பாராட்டும்படி அன்று வாழ்ந்தான். நேற்று வேறொருத்தியோடு வதுவை அயரத் தேர்மணி ஒலிக்கச் சென்றான். அவனைக் காணும் விருப்போடு புதல்வன் தளர்பு தளர்பு ஓடினான். அதனைக் கண்டவன் தேரை நிறுத்தச் சொல்லி புதல்வனை எடுத்து மார்போடு அணைத்தபின் கீழே இறக்கி விட்டு 'வீட்டுக்குள் செல்க' எனச் சொல்லி விட்டுவிட்டுச் சென்றுவிட்டான். அன்று புதல்வன் அழுதுகொண்டே வீட்டுக்குள் வந்தான். இன்று அந்தப் புதல்வனைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் வருகிறான். என்ன செய்வது? என்கிறாள் தலைமகள்.