சோ. நடராசன்
| சோ. நடராசன் | |
|---|---|
| பிறப்பு | 10 சூலை 1910 நவாலி, யாழ்ப்பாணம் |
| இறப்பு | 28 June 1988 (aged 77) |
| மற்ற பெயர்கள் | நவாலியூர் சத்தியநாதன், தர்மரத்ன தேரர் |
| பெற்றோர் | சோமசுந்தரப் புலவர், சின்னம்மை வேலுப்பிள்ளை |
சோ. நடராசன் (சூலை 10, 1910 – சூன் 28, 1988) ஈழத்து எழுத்தாளர். இவர் நவாலியூர் சத்தியநாதன் எனும் புனைப்பெயரைக் கொண்டவர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன் ஆவார். பல கவிதைகள், சிறுகதைகள் எழுதியவர். தமிழில் முதல் நிரந்தர ஒலிபரப்பாளராக இருந்தவர். தமிழ், சம்ஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். சமஸ்கிருதம், சிங்கள மொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.[1] பத்திரிகை ஆசிரியராகவும், இலங்கை வானொலி தமிழ்ச்சேவை அறிவிப்பாளராக 1937 டிசம்பர் 1-ந்.திகதி நியமிக்கப்பட்டார். இவரே இலங்கை வானொலியின் முதல் நிரந்தர தமிழ் அறிவிப்பாளர் ஆவார். (அதற்கு முன் தபால் திணைக்களத்தில் மின்சார தொழில் நுட்ப வல்லுநராக இருந்த கே. விநாயகமூர்த்தி என்பவர் தற்காலிக தமிழ் அறிவிப்பாளராக பணியாற்றினார்.) 1942 ஏப்ரல் 5-ந்.திகதி கொழும்பு நகரில் யப்பான் குண்டு போட்டபோது இவர் தகவல் திணைக்களத்தால் அழைக்கப்பட்டு தகவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். [2]
வாழ்க்கைக் குறிப்பு
இவர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் புதல்வர் மேலும் நவாலியூர் சோ. இளமுருகனாரின் சகோதரனும் ஆவார். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றார். ஆரம்பத்தில் இலங்கை தகவல் திணைக்களத்தில் ஒரு பத்திரிகை தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிந்தார். 1944இல் பட்டப்படிப்பை நிறைவு செய்து, கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னா் மூன்றாண்டு காலம் தமிழ் விரிவுரையாளராக விளங்கினார். பாடசாலைப் பரிசோதகராகப் பணியாற்றிய பின்னர், அரச கரும மொழித் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், கல்வி வெளியீட்டுத் திணைக்கள உயர் அதிகாரியாகவும் பதவி வகித்தார்.
பிற்காலம்
சோ. நடராசன் பிற்காலத்தில் தர்மரத்ன தேரர் என்ற பெயரில் பௌத்த துறவியானார். மணிமேகலை காப்பியத்தை சிங்கள மொழியில் பெயர்த்து வெளியிட்டார். அத்துடன் "தென் இந்தியாவில் பௌத்தம்" (Buddhism in South India) என்ற ஆங்கில மொழி நூலையும் எழுதி வெளியிட்டார்.[3] 1988 சூன் 28 இல் தனது 77-ஆவது அகவையில் காலமானார்.
எழுதிய நூல்கள்
- இலங்கையின் பூர்வ சரித்திரம் (மொழிபெயர்ப்பு)
- உலக ஐக்கியத்துக்கு அத்திவாரம்
- கீதாஞ்சலி (குமரன் பதிப்பகம் கொழும்பு: 1950, 2008, மொழிபெயர்ப்பு)[4]
- மேகதூதம்
- சித்தார்த்தர்
- பூவை விடு தூது (மொழிபெயர்ப்பு)[4]
- புத்த பகவான் அருளிய போதனை (மொழிபெயர்ப்பு)[5]
- செய் மதி (மொழிபெயர்ப்பு, மூலம்: ரெஜி சிறிவர்த்தன, 1971)[6]
- விநோதனின் சாகசம் (மொழிபெயர்ப்பு, 1966)
- சிவானந்த நடனம் (மொழிபெயர்ப்பு, 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்)
வெளி இணைப்புகள்
- சகல கவலைகளையும் துன்பங்களையும் ஒழித்தல் - சோ. நடராசன் எழுதிய கட்டுரை
- கற்சிலை - சோ. நடராசன் எழுதிய கதை. 29.06.1941 ஈழகேசரி இதழில் வெளியானது.
மேற்கோள்கள்
- ↑ உமா காந்தன், எஸ். எஸ். (2016-05-27). "இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் (நூல்) - தம்பிஐயா தேவதாஸ் - தி இந்து". Archived from the original on 2016-05-27. Retrieved 10 திசம்பர் 2025.
- ↑ This is Colombo Calling (page=266)
- ↑ "Devanesan Nesiah's ." Archived from the original on 10 December 2025. Retrieved 10 December 2025.
- ↑ 4.0 4.1 "SEU Library Network". Retrieved 26 மே 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "மார்க்க பகுப்பாய்வு - பௌத்தமும் தமிழும்! bautham.net". Retrieved 26 மே 2016.
- ↑ "Cey mati (Book, 1971) [WorldCat.org]". Retrieved 26 மே 2016.
