நப்பண்ணனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நப்பண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பரிபாடல் 19 எண்ணுள்ள பாடல் ஒன்று மட்டும் இவர் பாடியதாகக் காணக்கிடக்கிறது.

இந்தப் பாடலில் இவர் கடவுள் முருகனை வாழ்த்தியுள்ளார்.

இந்தப் பாடலுக்கு மருத்துவன் நல்லச்சுதனார் என்னும் இசைவாணர் இசை அமைத்துக் காந்தாரப் பண்ணில் இவரது பாடலைப் பாடியுள்ளார்.

பாடல் சொல்லும் செய்தி

கடம்ப மரத்தடியில் வீற்றிருப்பது, திருப்பரங்குன்றத்தில் விழாக் கொள்வது, மயிலைக் கொடியாகக் கொள்வது முதலான செய்திகள் சொல்லப்படுகின்றன.

பாண்டியன் வழுதியின் குடும்பமே திருப்பரங்குன்ற மலைக்குச் சென்று வழிபட்டது. 'படுமணி யானை நெடியோய்' என வாயாரப் பாடி மக்களெல்லாம் வழிபட்டனர்.

முருகன் குருகு பெயரிய குன்றம் எறிந்த வேலை உடையவன். அரசனின் படை செல்வது போல மக்கள் யானை, குதிரை, தேர் ஆகியவற்றில் சென்று வழிபட்டனர்.

வழியில் மக்கள் குரங்குகளுக்குப் பண்ணியம் கொடுத்தனர். கருங்குரங்குக்குக் கரும்பு கொடுத்தனர். தெய்வங்களுக்குத் தேன் படைத்தனர். வழியில் வையையாற்றுப் பெருக்கைக் கண்டு களித்தனர். சிலர் யாழ் போன்ற குரலில் பாடினர். சிலர் வேள்வி மந்திரம் போல ஒலித்து மகிழ்ந்தனர். சிலர் கொம்பு ஊதுவது போலக் குரல் கொடுத்தனர். சிலர் முரசு போல் முழங்கினர்.

இரதி மன்மதன் போல வேடம் பூண்டு ஆடினர். அகலிகை இந்திரன் கௌதமன் கதை வெளிப்பட நாடகம் ஆடினர். கட்டுவித்தை காட்டினர். இப்படித் திருப்பரங் குன்றமே 'சோபன' மயமாயிற்று.

குளங்களிலும், சோலைகளிலும் பூத்துக் குலுங்கும் மலர்கள் போல் மக்கள் மலர்ந்து மகிழ்ந்திருந்தனர். தம்மை அழகாக ஒப்பனை செய்துகொண்டனர்.

முருகன் குறப்பெண் கொடியை மணந்தவன். அவன் நிறமும் உடையும் செந்நிறம். படை பவழ நிறம். உருவம் தீ போன்றது.

மாமுதல் தடிந்தவன். குன்றம் உடைத்தவன்.

முருகா! உன்னை எம் ஆயத்தோடு கூடி வந்து ஏத்தித் தொழுகின்றோம்.

"https://tamilar.wiki/index.php?title=நப்பண்ணனார்&oldid=12527" இருந்து மீள்விக்கப்பட்டது