நாவண்ணன்
நாவண்ணன் | |
|---|---|
| பிறப்பு | மார்ச்சு 15, 1947 மன்னார், இலங்கை |
| இறப்பு | April 15, 2006 (aged 59) |
| தேசியம் | இலங்கைத் தமிழர் |
| அறியப்படுவது | கவிஞர், ஓவியர், ஈழத்து எழுத்தாளர், சிற்பி |
நாவண்ணன் (மருசலீன் சூசைநாயகம், மார்ச் 15, 1947 - ஏப்ரல் 15, 2006) ஓர் இலங்கைத் தமிழ் கவிஞர், ஓவியர், சிற்பவல்லுனர், நாடக நெறியாள்கையாளர் ஆவார்.[1] போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஓவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டவர். நாட்டுப்பற்றாளர். இவர் தனது கலைப்படைப்புகள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும் ஒடுக்குமுறைக்கு எதிரான கொதிப்புணர்வையும் தூண்டி விட்டவர். சிங்கள அரசு தமிழீழத்திலே நிகழ்த்திய கொடுமைகளையும், கொடூரங்களையும் அதனதன் தன்மைகளோடு காலவரிசைப்படி பதிவு செய்தவர். போராட்ட வாழ்வில் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் பல்வேறு கோணங்களில் படம்பிடித்தவர். புதிய கலைவடிவங்களைக் கண்டறிந்து அவற்றோடு புதியநுட்பங்களைப் புகுத்தி, காலத்திற்கேற்ப, வரலாற்று ஓட்டத்திற்கு ஏற்ப கலைப்படைப்புக்களைச் செய்தவர்.
எழுத்துலகம்
- இவர் 1957 இலிருந்து நடந்த தமிழர் மீதான இனப்படுகொலை நிகழ்வுகளின் சாட்சியங்களை 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற பெயரில் நூலாக்கித் தொகுத்திருந்தார்.
- சிங்களப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மன்னார் - வங்காலைப் பங்குத்தந்தை மேரி பஸ்ரியன் அடிகளார் பற்றி 'தீபங்கள் எரிகின்றன' என்ற பெயரில் எழுதினார்.
- விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கரும்புலியாக வீரச்சாவடைந்தவர்களின் வரலாற்றை 'கரும்புலி காவியம்' என்ற பெயரில் எழுதினார்.
- 1999 இல் நடைபெற்ற மடுத்தேவாலயப் படுகொலை பற்றி ஒரு தொகுப்பை கையெழுத்துப்பிரதியாகச் செய்திருந்தார். அது அச்சில் வெளிவரவில்லை.
- இவரது 'அக்கினிக் கரங்கள்' என்ற நூல் மார்ச் 1, 2006 அன்று கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது.
- நவாலிப் படுகொலையின் நினைவாக 'எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன' என்னும் நூலை 10-10-1995 அன்று நவாலி தேவாலயத்தின் முற்றத்தில் வைத்து வெளியிட்டார்.
புலிகளின் குரல் வானொலியில்
புலிகளின் குரல் வானொலியில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்தார். தொண்ணூறுகளின் இறுதியில் 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற தொடர் நிகழ்ச்சி ஒன்றை வானொலியில் வழங்கினார். ஏற்கெனவே அதேபெயரில் தானெழுதிய புத்தகத்தை இன்னும் விரிவாக்கி, நேரடி சாட்சியங்களின் ஒலிவடிவச் செவ்விகளையும் சேர்த்துத் தொகுத்து வழங்கினார். குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சமாக, அதிகளவில் பேசப்படாத, ஆவணப்படுத்தப்படாத கிழக்கு மாகாணச் சம்பவங்களை சம்பந்தப்பட்டவர்களின் நேரடிக் குரற்பதிவுகள் மூலம் ஆவணப்படுத்தினார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த காலப்பகுதியை அண்மித்து நடந்த படுகொலைகள், சித்திரவதைகள் வரை பல விடயங்களை ஒலிவடிவிலேயே ஆவணப்படுத்தி அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழங்கினார்.
குடும்ப விபரம்
இவருக்கு ஒரு மகன் ஐந்து மகள்கள். இவரின் மகன் சூசைநாயகம் கிங்சிலி உதயன் (2ஆம் லெப்.கவியழகன்) போராட்டத்தில் இணைந்து மே 16, 1997 அன்று வவுனியா நெடுங்கேணியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் களமொன்றில் வீரச்சாவடைந்தார்.
விருதுகள்
இவரது விடுதலைப் பணியைக் பெருமைப்படுத்தும் முகமாக 'மாமனிதர்' என்ற அதியுயர் தேசியவிருது இவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலியின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் வழங்கப்பெற்றது.
தங்கப்பதக்கம்
புலிகளின் குரலில் சிறப்பாகச் செயற்பட்டமைக்காக 1998 இலும், கரும்புலி காவியம் நூல் உருவாக்கம், கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இன்னொரு தடவையுமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் இரு தங்கப்பதக்கங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.[2]
பரிசுகள்
லெப்.மாலதியின் உருவச்சிலை வடிவமைப்புக்காக தளபதி கேணல் ஜெயமிடம் இருந்து பரிசு பெற்றார்.[3][4]
இவர் எழுதிய ஈழப்போராட்டப் பாடல்களில் சில
- என் இனமே என் சனமே என்னை உனக்குத் தெரிகிறதா...[5][6]
- கட்டுமரம் மேலே ஏறி கடலில் போற மச்சான்..[7]
- வீரக்குழந்தைகளே எங்கள் வெற்றித்திலகங்களே...[8][9][10]
- கன்னங்கள் தாங்கிய காலங்கள் போதும்...[11][12]
- எத்தனை நூறு வித்துக்கள் விழுந்தன...
- சோலைக்கிளிகள் சொல்லும் கதைகள் சொந்தக் கதைகள்
- சின்னச்சின்ன ரோஜாக்கள் செஞ்சோலை வளர்பூக்கள்
- விடியும் என்று காத்திருந்தோம் இருள் கவிந்தது
- செஞ்சோலைத் தங்கங்களே செந்தமிழின் செல்வங்களே
- மலரத் துடிக்கும் மொட்டுக்கள் பறக்கத் துடிக்கும் சிட்டுக்கள்
- கடலோரக்கரை மேலே காதல் என்ன தோணிக்காரா
- எட்டி எட்டி வைத்தடிகள்[13]
- வித்தொன்று விழுந்தாலே முளைதோன்றுமா
- சங்கம் முழங்கிய திருவாயெங்கே
- வட்டமதிமுகப் பெண்ணே[14]
- குருதி எழுதும் கவிதை[15]
- வாழ்க வாழ்க வாழ்க ஒளிவீச்சு[16]
- அன்னை ஈழம் ஈன்றெடுத்த பிள்ளையிவள்[17][18][19][20]
- கிட்டு படைப் பீரங்கிக்கு கிட்ட நிற்க யாருமில்லை[21]
- வசந்தம் இன்னும் வரவில்லையே குயிலே[22]
- கண்ணின் முத்துக்கள்[23]
- ஒளிநிலவாய் கரியபுலி நிலவாய் ஈழச்சுடர்களிலும் முதற்சுடராய்[24]
- தாய் பூபதித்தாய் அறப்போர் தொடுத்தாய்
- என்ன அதிசயமோ[25]
- கிட்டுமாமா கிட்டுமாமா எங்கே போனீங்க[26]
- கீதம் இசைக்குது காதினிலே
- நெற்றியிலே திலகமிடும் ரத்தம் வெற்றியிலே முடியுமித்த யுத்தம்
- ஆழக்கடல் நிலைபெறும் அலை இருக்காது[27]
இவற்றுள் சில.
இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்
- 1972 இறுதி மூச்சு
- 1976 தமிழன் சிந்திய இரத்தம்-(1958 இனக்கலவரம் பற்றியது)
- 1976 புத்தளத்தில் இரத்தக்களம் -(1976ல் நடந்த சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் பற்றியது)
- 1978 பயணம் தொடர்கிறது (நாவல்)
- 1988 நானொரு முற்றுப்புள்ளி (சிறுகதைத் தொகுப்பு)
- 1988 தீபங்கள் எரிகின்றன (தனி மனித வரலாறு)
- 1989 இத்தாலியன் தந்த இலக்கியத்தேன் (இலக்கியம்)
- 1992 கதை-கண்ணீர்- கவிதை (மலையக மக்கள் தொடர்பான குறுங்காவியம்)
- 1989 நினைவாலயம் (குறுநாவல்)
- 1994 பொழிவு (அரங்கக் கவிதைகள்)
- 1995 எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன
- 2002 கரும்புலி காவியம் -பாகம் 1
- 2005 சுனாமிச் சுவடுகள்[28]
எழுதி முடிக்கப்பட்ட வெளிவராத நூல்கள்
- வலிகாமம் இருந்து வன்னி வரை
- குருதியில் நனைந்த திருவடிகள்
- வித்தான காவியம்
- முல்லை அலை விடு தூது (தூதுப் பிரபந்தம்)[28]
எழுதும் முயற்சியில் இருந்தது
- புலம்பெயர்ந்த ஈழத்து உறவுகளின் வரலாறு[28]
மேற்கோள்கள்
- ↑ "Pirapaharan confers Maamanithar award to Poet Naavannan". TamilNet. April 15, 2007. https://tamilnet.com/art.html?catid=13&artid=21896.
- ↑ "புலிகளின் தலைமையால் மாமனிதராக மதிக்கப்பட்ட கலைஞர் நாவண்ணன்". Archived from the original on 2016-04-21. Retrieved 2016-04-28.
- ↑ லெப்.மாலதியின் உருவச்சிலை வடிவமைப்புக்காக தளபதி கேணல் ஜெயம் அவரிகளிடம் பரிசு வாங்கும் கலைஞர் நாவண்ணன்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Malathy Memorial opened in Kilinochchi". TamilNet. October 10, 2004. https://tamilnet.com/art.html?catid=13&artid=13106.
- ↑ 'தமிழீழ எழுச்சிப் பாடல்கள் - பாகம் 01' நூல் (1991).
- ↑ முரசொலி-1991.08.09 - பக். 02.
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 107.
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு இதழ் 93 (ஆகஸ்டு 2001).
- ↑ 'தமிழீழ எழுச்சி கானங்கள்' (2003) நூல் பக். 11.
- ↑ சிறீகுகனின் இசையில் ஜெயா சுகுமாரும் சீலன் (திருமாறன்) சேர்ந்து பாடிய பாடல்.
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு இதழ் டிசம்பர் 1997.
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு இதழ் ஏப்ரல் 2000.
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 79 - மே 2000.
- ↑ ஈழநாதம் 2005.05.21 பக். 9.
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 104 (ஜனவரி-பெப்ரவரி 2004).
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 69 - மே 1999.
- ↑ "முகங்கள்" திரைப்படத்திலிருந்து.
- ↑ ஈழநாடு-1995.06.19 - பக். 6.
- ↑ ஈழநாடு-1995.06.20 - பக். 2.
- ↑ 'வெளிச்சம்' இதழ் புரட்டாதி 1995 - பக். 68-69.
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 104 (ஜனவரி-பெப்ரவரி 2004).
- ↑ மேஜர் சிட்டுவின் நினைவாக முரளியின் இசையில் குமரதாஸ் மணிமொழி ஆகியோர் சேர்ந்து பாடியவர்கள்.
- ↑ செங்கதிர் பாடியது.
- ↑ கரும்புலி மேஜர் நிலவனின் நினைவாக சிறீகுகனின் இசையில் சீலன் (திருமாறன்) பாடிய பாடல்.
- ↑ மாலிகாவின் நினைவாக சாந்தன் பாடியது.
- ↑ குட்டிக்கண்ணன் பாடியது. புலிகளின் குரல் வெளியீடு.
- ↑ கேணல் ராஜூவின் நினைவாக சந்திரமோகன் பாடிய பாடல்.
- ↑ 28.0 28.1 28.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-01-28. Retrieved 2021-01-22.
வெளி இணைப்புகள்
- கதை கண்ணீர் கவிதை - கவிதைத்தொகுப்பு நூலகத்தில்
- நாவண்ணன் பற்றி - மட்டுவில் ஞானக்குமாரன்
- இறுவெட்டு - அக்கினிச் சுடர்கள் பரணிடப்பட்டது 2016-06-21 at the வந்தவழி இயந்திரம்