பனம்பாரனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பனம்பாரனார் தொல்காப்பிய நூலுக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் ஆவார். தொல்காப்பியருக்குச் சமகாலத்தவர். தொல்காப்பியரும் பனம்பாரனாரும் ஒருசாலை மாணாக்கர் என்றும் கூறப்படுகிறது. பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன.இருப்பினும் இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தற்போதைய பன்னம்பாறை என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.[1][2]

தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

பனம்பாரனார் சொல்லும் செய்திகள்

தமிழ்கூறு நல்லுலகம்

வடக்கில் வேங்கடமலைக்கும், தெற்கில் குமரிமுனைக்கும் இடையில் பரந்துகிடப்பது.

தொல்காப்பியத்துக்கு முதல்

தமிழ் கூறு நல்லுலகத்தில் நிலவிவந்த வழக்கு மொழியும், செய்யுள் மொழியும்.

தொல்காப்பியர் ஆராய்ந்து பார்த்தது

  1. தமிழ் நூல்கள் பயன்படுத்திய எழுத்து
  2. பேச்சிலும் எழுதப்பட்ட நூலிலும் அமைந்திருந்த சொல்லமைதி
  3. பேச்சும் நூலும் உணர்த்திய பொருளமைதி

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்

செந்தமிழ் இயல்பாகப் பேசப்படும் நிலத்துக்கு அண்மையதாய்ப் பொருந்தியிருக்கும் நிலத்தில் நிலவிவந்த தமிழும் தொல்காப்பியரால் ஆராயப்பட்டது.

முந்துநூல்

தொல்காப்பியருக்கு முன் தோன்றி நிலவிவந்த இலக்கண, இலக்கியங்கள். இவற்றைத் தொல்காப்பியர் கண்டறிந்தார். அவற்றை முறைப்படுத்தி எண்ணிப் பார்த்தார்.

புலம்

மொழிப்புலம். Field of the Language. தொல்காப்பியர் மொழிப்புலம் தொகுத்துத் தந்தார்.
  • போக்கு = மனம் போன போக்கு, குற்றம்
  • பனுவல் = (பன் = பஞ்சு, பனுவல் = பஞ்சை நூலாக்கி ஆடை நெய்வது) நூல் - இது எழுத்து என்னும் பஞ்சைச் சொல் என்னும் நூலாக்கிப், பொருள் என்னும் ஆடையாக்கிக் கொள்வது. நூல் - ஆகுபெயர்.
மனம் போன போக்கில் எழுதாமல், மொழியமைதியைத் தழுவியே பனுவல் செய்தார்.

அரங்கேற்றம்

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் (தமிழ்ச்சங்கத்தில்) அரங்கேற்றப்பட்டது.

தமிழவைத் தலைமை

தொல்காப்பியர் தொல்காப்பியத்தை அரங்கேற்றியபோது அவைக்குத் தலைமை தாங்கியவர் அதங்கோட்டாசான் (அதங்கோட்டு ஆசான்). இவரது நாவில் அறநெறி கரைந்த சொல் வெளிப்படும். இவர் நான்மறை முற்றக் கற்றவர். அரங்கேற்றத்தின்போது இவர் சில அரில்களை(ஐயங்களை) எழுப்பினார். அவற்றைத் தொல்காப்பியர் போக்கினார். பின்னரே தொல்காப்பியம் அரங்கேறியது.

மயங்கா மரபின் எழுத்துமுறை

அதங்கோட்டாசானுக்கு எழுந்த ஐயங்கள் எழுத்து எழுத்துமுறை வைப்பில் எனப் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் தனது நூலில் முந்தைய நூல்களின் அதாவது முந்துநூல்களில் தமிழ் எழுத்துகள் மயங்கா மரபில் தன் நூலில் காட்டப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டித் தெளிவுபடுத்தினார்.

ஐந்திரம்

தொல்காப்பியர் ஐந்திரம் என்பது தமிழர் பல ஆண்டுகள் ஆய்ந்து உணர்ந்த (நிலா, கோள், விண்மீன்,ஓகம் மற்றும் கரணங்கள்) ஆகிய ஐந்தின் திரன்பற்றிய நூட்களாகும்[சான்று தேவை] என்று சிலர் கூறிடினும்் தமிழில் திரன் என்ற சொல்லுக்கு இயல்பு என்ற பொருள் இல்லாததனால் இதை ஐந்திரம் என்பது வடமொழி இலக்கண நூல் என்றும் அதனை மேற்கொள் காட்டி அதங்கோட்டாசானின் ஐயங்களைப் போக்கினார் என்பதும் அறிஞர் முடிவு. மொழி ஆய்வாளர்களின் கூற்றுப்படி வட மொழி எனப்படும் சமஸ்கிருத மொழி ஏறத்தாழ பொ யு மு ஆறாம் நூற்றாண்டிலேயே பாணினி சூத்திரம் நிறுவினாரென்றும், அவர் நூலிலேயே தனக்கு முன் இருந்த பல இலக்கணங்களின் பெயரையும் கூறியுள்ளார் ஐந்திரம், சாந்திரம், காஸக்ருத்ஸ்னம், கௌமாரம், ஸாகலாயனம், ஸாரஸ்வதம், சாபிஸலம், ஸாகலம்,[சான்று தேவை] என்று. இவற்றால் தமிழுக்கும் வடமொழிக்கும் மூல இலக்கணங்கள் ஒன்றே என்பது தெளிவு.

தொல்காப்பியன் பெயர் பற்றி

தொல்காப்பியர் என்னும் பெயர் தொல் (பழைய) + காப்பியம் (காவியம்) என்று பிரியும். காவியம் என்பது வட மொழிச் சொல். கவி என்ற பெயர்ச் சொல்லில் பிறந்த தத்திதாந்த வடிவம். மாற்றுக் கருத்தாகத் தொல்காப்பியர் தமிழின் தொன்மைக் காப்பை இயம்பும் (தொல்காப்பியம்) தொல்காப்பியன் என அரங்கேற்ற அவையில் தனது செயலை விளக்கும் காரணப்பெயரைத் தானே தோற்றுவித்துக்கொண்டார் என ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

படிமையோன்

தொல்காப்பியர் தமிழின் பல்வகைப் புகழைத் தன் தொல்காப்பியத்தில் நிலைநிறுத்திக் காட்டியுள்ளார் என்று பனம்பாரனார் குறிப்பிடுகிறார். இவரது கூற்று தமிழின் புகழைப் படிமையாக்கிய படிமையோன் என்றும் பொருள்படுமாறு அமைந்துள்ளது. படிமையோன் என்பதற்குப் படிமையாகிய தவக்கோலம் பூண்டவர் என்றும் பொருள் காண்கின்றனர்.

குறுந்தொகைப் பாடல் ஆசிரியர்

குறுந்தொகை 52-ஆம் பாடலைப் பாடியவர் ஒரு பனம்பாரனார். இவர் தொல்காப்பியப் பாயிரம் பாடிய பனம்பாரனாருக்குக் காலத்தால் பிற்பட்டவர்.

குறுந்தொகை 52 ஆம் பாடல்

ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்

சூர்நசைத் தலையையாய் நடுகல் கண்டே

நரந்தம் நாறும் குவையிருங் கூந்தல்

நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை

பரிந்தனென் அல்லனோ இறைஇறையானே.

பாடல் செய்தி

திருமணத்திற்கு நாள் குறித்தாயிற்று. தலைவியின் வாயில் வெண்பல் தெரிகிறது. நடுகல் கண்டு இறைவன் என்று வழிபட்டதன் பயன் இஃது என்கிறாள் தோழி.}}

பன்னம்பாறை (Pannamparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும். சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.

பன்னம்பாறை நில அமைப்பு

  • இயற்கையோடு இயைந்த குறிஞ்சி நிலத்தின் பாறை மற்றும் விவசாயத்திற்கான மருத நிலத்தின் தன்மையைக் கொண்டுள்ளது இவ்வூர்.
  • அழகிய நீரோடைகள் மற்றும் குளங்களைக் கொண்டுள்ளது.

இவ்வூரின் வடக்கில் காணப்படும் பழுப்பேறிய அடுக்குப்பாறைகள், சரளைக்கற்கள்,சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பெருமழைக்காலத்தில் தோன்றியதாகும். மணல் என்பது உடைந்த பாறைத் துண்டுகளையும், இயற்கைக் கனிமங்களையும் கொண்டிருக்கும். செம்மண்பாறை,சுண்ணாம்புப்பாறை,அடுத்து லேசானபாறை காணப்பட்டால் அவ்விடத்தில் நீர்வளம் மிகுந்திருக்கும் என்பது தமிழனின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆகும். முற்காலத்தில் கடுமையான பாறைப்பகுதியில் குடியேற்றங்கள் அவ்விதத்திலே நிகழ்ந்துள்ளன.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,615 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2615 ஆகும். இவர்களில் பெண்கள் 1405 பேரும் ஆண்கள் 1210 பேரும் உள்ளனர்.[4] மேலும் இந்த கிராமத்தில் அதிக அளவில் காணப்படுவது இளைஞர்களே என்பது இதன் தனி சிறப்பு. 61% மக்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் காணப்படுகின்றனர். 72% மக்கள் படிப்பறிவினைக் கொண்டுள்ளனர். 1996 வரை 86% விவசாயிகளைக் கொண்ட கிராமம் அதன் பின்பு அந்தப் பெருமையைப் படிப்படியாய் இழந்து வருகின்றது. தற்போது வெறும் 14% மக்களே விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டு அந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[5]:

  1. கிழக்கு பன்னம்பாறை (தற்போது மக்கள் இங்கு வசிக்கவில்லை, இடிந்த நிலையில் வீடுகள் மட்டுமே உள்ளன)
  2. பன்னம்பாறை (வேதகோவில் தெரு / அழகேசன் தெரு / அம்பேத்கர் தெரு / இந்திரா காலனி)
  3. வள்ளியம்மாள்புரம் பன்னம்பாறை
  4. புதுக்கிணறு பன்னம்பாறை
  5. வடக்கு பன்னம்பாறை
  6. தெற்கு பன்னம்பாறை
  7. நகனை பன்னம்பாறை
  8. வடலிவிளை பன்னம்பாறை
  1. இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தற்போதைய பன்னம்பாறை என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது
  2. "பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" என்னும் குறிப்பு இந்த ஊகத்தை வலுவூட்ட செய்கிறது.
  3. "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
  5. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=பனம்பாரனார்&oldid=12587" இருந்து மீள்விக்கப்பட்டது