பறந்து போ

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பறந்து போ
திரைப்பட பதாகை
இயக்கம்ராம்
தயாரிப்புராம்
வி. குணசேகரன்
வி. கருப்புச்சாமி
வி. சங்கர்
சஜித் சிவாநந்தம்
கே. மாதவன்
கதைராம்
இசைபிண்ணனி:
யுவன் சங்கர் ராஜா
பாடல்கள்:
சந்தோஷ் தயாநிதி
நடிப்புசிவா
மிதுல் இரயன்
அஞ்சலி
ஒளிப்பதிவுஎன். ஏக. ஏகாம்பரம்
படத்தொகுப்புமதி வி. எஸ்.
கலையகம்செவன் சீஸ் செவன் ஹில்ஸ் புரடெக்சன்சு
ஜியோ ஹாட் ஸ்டார்
ஜிகேஎஸ் ப்ரோ புரடெக்சன்சு
விநியோகம்ரோமியோ புரடெக்சன்சு
ஐங்கரன் இண்டர்நேசனல்
வெளியீடு4 பெப்பிரவரி 2025 (2025-02-04)(ரோட்டர்டாம் பன்னாட்டு திரைப்பட விழா)
4 சூலை 2025 (இந்தியா)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பறந்து போ 2025ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1]

கதைக்களம்

அன்பு என்ற 8 வயது சிறுவன் தனிமையை வெறுக்கிறான். விடுமுறை நாள்களில் நடக்கும் இணைய வழி வகுப்புகளையும் வெறுக்கிறான். அன்புவின் தாய் குளோரியா கிரேசு அந்தோணியும் தந்தை கோகுலாக சிவாவும் நடித்துள்ளனர். தாயும் தந்தையும் கீழ் நடுத்தர வர்க்கத்து சமன்படுத்தப்பட்ட மாதாந்திரத் தவணைகளில் இருந்து விடுபடும் பொருட்டு தத்தமது பணிகளில் நேரம் செலவழிக்கின்றனர். தங்கள் மகனின் கல்வித் தேவைக்காக செலவழிக்க அவர்கள் தயங்குவதில்லை. அன்பு தனது தாயும் தந்தையும் தன்னுடன் நேரம் செலவழிப்பதில்லை என்ற கவலையுடன் வீட்டிலும் பள்ளியிலும் பல குறும்புத்தனங்களை செய்து வருகிறான். மகனைச் சமாதானப்படுத்த சிறிது தொலைவு சாலையில் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லலாம் என்று தொடங்கும் பயணம் ஒரு நீண்ட பயணமாகவும் அன்புவிற்கு பல்வேறு அனுபவங்களைத் தருவதாகவும் அமைகிறது. தந்தையுடனான தனது சாலைப்பயணத்தை மிகவும் இரசிக்கும் அன்பு அவ்வப்போது தந்தையிடமிருந்து பிரிந்து காணாமல் போய் புதிய அனுபவங்களைச் சந்திக்கிறான். அன்புவைத் தேடித் தொடர்ந்து அலைந்து அவனின் குறும்புத் தனங்களை இரசிக்கும் தந்தையாய் கோகுல் இருக்கிறார். கிடைக்கும் நேரங்களில் அலைபேசியில் கணவனுடனும் மகனுடனும் பேசிக்கொண்டே தொடர்ந்து தன் துணி விற்பனைத் தொழிலைச் செய்து கொண்டிருக்கிறார் குளோரி. அன்புவின் பயணம் அவன் வாழ்விலும் அவன் குடும்பத்திலும் மாற்றங்களைக் கொண்டு வந்ததா என்பதே திரைக்கதையின் முடிவாக இருக்கிறது.

நடிகர்கள்

  • சிவா - கோகுல், அன்புவின் தந்தை
  • கிரேசு ஆந்தோனி - குலோரி, கோகுலின் மனைவி - அன்புவின் தாய்
  • அஞ்சலி - வனிதா
  • மிதுல் இரயன் - அன்பு
  • விஜய் யேசுதாஸ் - ஜென்னாவின் தந்தை
  • அஜு வர்கீசு
  • ஜெசு குக்கு- ஜென்னா
  • தியா - ஜென்னாவின் தாய்
  • பாலாஜி சக்திவேல் - கோகுலின் தந்தை
  • ஸ்ரீஜா ரவி
  • தேஜசுவினி - அன்புவின் நண்பர் (கால்பந்து விளையாட்டு வீரர்)

விமர்சனங்கள்

ஆனந்த விகடன் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "நவீன பொருளாதாரச் சூழலும், நகரமயமாக்கலும் தரும் அதீத அழுத்தங்களால் பெற்றோர் மீது திணிக்கப்படும் சுமைகள்... அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் குழந்தைகள் என்ற பிரச்னையை பீல் குட் படமாக உரையாடி, நம்மையும் குழந்தைகளின் உலகில் பறக்கவிட்டிருக்கிறது இந்த 'பறந்து போ'" என்று எழுதினர்.[2]

தினமலர் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "பொதுவாக ராம் இயக்கும் படங்களில் ஒருவித சோகம், கோபம், விரக்தி, துன்பியல் இருக்கும். பல காட்சிகள் மனதை பிழியும், படம் முடிந்துவிட்டு வரும்போது கண் கலங்குவோம். பறந்து போ, அதற்கு நேர்எதிர். படம் முழுக்க சிரிப்பு, சிரிப்பு, சிரித்துக் கொண்டே சந்தோஷமாக வெளியே வருகிற மாதிரியான திரைக்கதை. பறந்து போ படம் பார்த்துவிட்டு சில ஆண்கள் சிகரெட்டை விட்டால், பெற்றோர்கள் குழந்தைகளுக்காக நேரம் செலவழித்தால், குடும்பத்துடன் சின்னதாக டிரிப் கிளம்பினால் அதுவே படைப்புக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்" என்று எழுதி அளவீடுகளை வழங்கினர்.[3]

தினமணி வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "பறந்து போ படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் இந்தாண்டில் வெளிவந்த மிகச்சிறந்த தமிழ்ப்படம். கமர்சியலாகவும் கதையாகவும் ரசிகர்களை ஏமாற்றாத திரைப்படம். இயக்குநர் ராமின் திரைப்பயணத்தில் பறந்து போ தனித்துவமானது" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[4]

நக்கீரன் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் உறவை அழகாக காமெடி காட்சிகள் மூலம் சிறப்பாக கொடுத்திருக்கும் ராம் பல இடங்களில் காட்சிகள் அயற்சி ஏற்படுத்தி சற்றே நம்மை சோதிக்கும்படி அமைந்திருந்தாலும் அதைத் தாண்டி அப்பா மகன் உறவு, அம்மா மகன் உறவு என அழகான பாசப்பிணைப்போடு கலகலப்பான காமெடி காட்சிகள் மூலம் திரைக்கதை அமைத்திருப்பது அதை அனைத்தையும் மறக்கடிக்க செய்து ஒரு நல்ல ஃபீல் குட் காமெடி படம் பார்த்த உணர்வை இந்த பறந்து போ கொடுத்திருக்கிறது" என்று எழுதினர்.[5]

மேற்கோள்கள்

  1. "Director Ram and Shiva's film titled Parandhu Po; plot and cast REVEALED". OTTPlay (in ஆங்கிலம்). Archived from the original on 11 February 2025. Retrieved 2025-02-01.
  2. டீம், விகடன் (2025-07-04). "பறந்து போ விமர்சனம்: மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு... நம்மையும் பறக்க அழைக்கும் ராமின் உலகம்!". விகடன். Retrieved 2025-07-06.
  3. "பறந்து போ - விமர்சனம் {3.5/5} : பறந்து போ - சிரித்து, ரசித்துவிட்டு போ - Paranthu po". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). Retrieved 2025-07-06.
  4. சிவசங்கர் (2025-07-04). "வளரும் குழந்தையுடன் வளர வேண்டிய பெற்றோர்... பறந்து போ - திரை விமர்சனம்!". தினமணி. Retrieved 2025-07-06.
  5. செய்திப்பிரிவு, நக்கீரன் (2025-07-04). "சேட்டை குழந்தையுடன் பெற்றோரின் பயணம்; சுவாரஸ்யமாக அமைந்ததா? - 'பறந்து போ' விமர்சனம்". நக்கீரன். Retrieved 2025-07-06.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பறந்து_போ&oldid=427806" இலிருந்து மீள்விக்கப்பட்டது