மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கண்ணத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை அகநானூறு 360, நற்றிணை 351 ஆகியவை.
அகம் 360 சொல்லும் செய்தி
பகலில் வந்த தலைவனை இரவில் வருமாறு தோழி சொல்லி அனுப்புகிறாள்.
இரவில் வரவேண்டிய இடத்துக்கு அடையாளம் சொல்கிறாள். எங்கள் முற்றத்துப் பனைமரத்தில் நாரையும் அன்றிலும் இருக்கும். முற்றத்தில் புன்னைப் பூக்கள் பொன்னைப் போலக் கொட்டிக்கிடக்கும். இதுதான் அடையாளம் என்கிறாள்.
அந்தி வானம்
பகலின் ஒளி ஒருபுறமும், இரவின் இருள் மற்றொருபுறமும் மயங்கி நிற்பது அந்தி வானம். இது சிவனும் திருமாலும் ஓருருவம் பெற்றிருக்கும் தோற்றம் போல உள்ளதாம். இந்த அந்தியில் தலைவன் வந்துசெல்ல வேண்டாம் என்கிறாள் தோழி.
நற்றிணை 351 சொல்லும் செய்தி
தலைவியிடம் மாற்றம் கண்ட தாய் அவளை வீட்டுக் காவலின் வைத்துப் பார்த்துக்கொள்கிறாள். அத்துடன் கடவுளைப் பேணி முருகு அயர்கிறாள். இந்த நிலையில் தோழி தாய்க்கு எடுத்துரைக்கிறாள். கடவுளைப் பேணுவதால் பயனில்லை. தினைப்புனம் காக்க அனுப்பிவை. இழந்த அழகைத் தலைவி மீண்டும் பெறுவாள் - என்கிறாள்.
இதணம்
வேங்கைமரக் கிளைகளுக்கு இடையே களிற்றியானை குத்திக் கொன்ற புலித்தோலை இருக்கையாகக் கிளைகளில் இழுத்துக் கட்டி அமைக்கப்படுவது இதணம் என்னும் பரண்.
இதனைச் 'சாத்தில்' என்று கூறுவர். சாத்தப்பட்ட இல்லம் என்பது இதன் பொருள்.