மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் கோயில்
பெயர்
வேறு பெயர்(கள்):மொட்டைக்கோபுர முனி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:மதுரை
அமைவு:மதுரை
கோயில் தகவல்கள்
இணையதளம்:http://www.maduraimeenakshi.org

மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு என்பது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் அமைந்துள்ள மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாட்டைக் குறிக்கின்றது. அமராவதிபுதூர் வயிநாகரம் நாகப்ப செட்டியார் மொட்டை கோபுரமாக இருந்த வடக்கு கோபுரத்தை, தனது செலவில் 152 அடி உயர பிரம்மாண்ட கோபுரமாக 1878 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்.

பெயர்க்காரணம்

நீண்ட நெடு நாட்களாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்குக் கோபுரம் கட்டப்படவில்லை. செட்டிநாட்டைச் சேர்ந்த வயிநாகரம் நாகப்பச்செட்டியார் அவர்களால் 1878-ஆம் ஆண்டின் இறுதியில் வடக்குக் கோபுரம் கட்டப்பட்டது.[1] வடக்கு கோபுரம் கட்டப் படுவதற்கு முன்பே முனீஸ்வரன் என்ற நாட்டுப்புற சிறு தெய்வக் கோவில் சிறிய இடத்தில் அமைந்திருந்தது. வடக்குக் கோபுரம் கட்டப்படாத நிலையில் அதன் கீழ் இருந்த முனீஸ்வரன் கோவில் மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் கோயில் என்று அழைக்கப்பட்டது.

தனியார் குலதெய்வக் கோவில்

தனியார் ஒருவருக்குச் சொந்தமான குலதெய்வக் கோவில் இது. யாழ்கீத சுந்தரம் பிள்ளை குடும்பத்தார் இதனை அமைத்தனராம். சைவ பிள்ளை வகுப்பைச சேர்ந்த சுந்தரம் பிள்ளை இன்று உயிருடன் இல்லை. இவர் வாரிசுகளான நான்கு மகன்கள் இக்கோவிலை இன்று பராமரித்து வருகிறார்கள். என்றாலும் முனீஸ்வரன் பல்வேறு சாதியினராலும், பல்வேறு மதத்தவராலும் வழிபடப்படுகிறார்.

மொட்டைக் கோபுர மண்டபம்

இக்கோவிலுக்குரிய இடம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் மொட்டைக் கோபுரத்தின் அடியில் ஒரு மண்டபமாக இருந்துள்ளது. சிறிய கோவிலாக தொடங்கப் பட்ட முனீஸ்வரன் சன்னிதி மரத்தாலான கதவு இருந்ததாக பக்தர்கள் சொல்கிறார்கள். அந்நாளில் தரையோடு உள்ள வளையத்தில் சங்கிலியினை இணைத்து பூட்டுவது உண்டாம். முனீஸ்வரன் சன்னிதியின் முன்புறம் பெரிய கல்லாலான தூண்கள் உள்ளன.

நாட்டார் வழிபாடு

அந்நாளில் தினசரி வழிபாடு நாட்டார் இன பூசாரிகளால் நடத்தப்பட்டது. மந்திரங்கள் கால பூசைகள் மற்றும் வைதீகச சடங்குகள் எல்லாம் செய்யப்படவில்லையாம். அருச்சனை கட்டணங்கள் கூட வசூலிக்கப் படவில்லை என்கிறார்கள். துணைக்கோயில் வழிபாடு ஏதும் இல்லை வழிபடுவோர் தரும் தேங்காய் பழத்தைப் பூசாரி உடைத்துத் தீபம் காட்டுவார். அவற்றில் பாதி கொண்டு வருவோருக்கும் மறுபாதி பூசாரிக்கும் உரியதாகும். அர்ச்சனையின் போது வேத மந்திரங்கள் கூறப்படுவதில்லை. கட்டணமும் இல்லை கால பூசைகள் ஏதுமில்லை.

நிலை மாலைகள்

இன்று கூட செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் மீனாட்சி அம்மன் கோவில் வடக்குக் கோபுரத்தின் உச்சியிலிருந்து கதம்ப சரங்கள் தொங்கவிடப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் நூறு அடி நீளத்துக்கும் மேற்பட்டவை. ஒரே நாளில் ஒரே நேரத்தில் பத்து இருபது சரங்கள் கூட ஒரே நேரத்தில் தொங்கவிடப்படுகின்றன. பூசசரங்கள் மொட்டைக்கோபுர முனியின் சன்னிதியின் தூணில் கட்டப்பட்டிருக்கும்.

உயிர்ப்பலி

பழங்காலத்தில் உயிர்ப்பலி நடத்தப் பட்டதாகவும், தற்போது இந்த வழக்கம் நடைமுறையில் இல்லை என்று தெரிகிறது. என்றாலும் பக்தர்கள் ஆடு, கோழி, கன்றுக்குட்டி போன்ற உயிரினங்களை நேர்த்திக் கடனாக செலுத்துவது இன்றும் நடைபெறுகிறதாம்.

திருவிழாக்கள்

மாசி மாதம் வரும் வருஷ சிவராத்திரி மிகவும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. கோவில் பங்காளிகள் மற்றும் உரிமைக்காரர் மூலம் சக்தி கரகம் வைகை ஆற்றிலிருந்து அழைத்து வரப்படுகிறது. வழி நெடுக பூசாரி கரகம் பக்தர் வீடுகளின் எதிரே நிற்கும்போது கற்பூரம் காட்டுகிறார்கள். பூசாரி சாமியாடுகிறார். சிவராத்திரி அன்று படையல் போடுகிறார்கள். ஆடிப் பௌர்ணமி ஆடிப்பௌர்ணமி அன்று அழகர் கோயில் பதினெட்டாம் படிக் கருப்பணசாமியின் சந்தனக்குடம் இத்திருக்கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.

மேல்நிலையாக்கம்

நாட்டுப்புறத் தெய்வங்களை வழிபட்டு வந்த மக்கள் உயர்சாதி என கூறி கொண்டவர்களுக்கு உரிய நடைமுறை வழக்குகளைப் பின்பற்றி தங்கள் மதிப்பை உயர்த்தத் தொடங்கிய போது வழிபாட்டு நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. விநாயகர், முருகன் முதலிய தெய்வங்கள் இங்கு பரிவார தெய்வங்களாக தனி சன்னதியில் குடி கொண்டுள்ள்ளனர். வைதீக மந்திர வழிபாடுகள், கால பூசைகள், வைதிகர்களால் நடத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

உதவிய நூற்பட்டி

  • மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் ஆலய வரலாறு (தனியார் வெளியீடு)