மாருதி (ஓவியர்)

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஓவியக் கலைமாமணி
மாருதி
பென்சில் ஓவியத்தில் ஓவியர் மாருதி
பிறப்புவெ. இரங்கநாதன்
28 ஆகத்து 1938
புதுக்கோட்டை, புதுக்கோட்டை அரசாட்சி,
பிரித்தானிய இந்தியா
(தற்போது புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு27 July 2023(2023-07-27) (aged 84)
புனே, மகாராட்டிரம், இந்தியா
பெற்றோர்பத்மாவதி பாய் (தாய்)
டி.வெங்கோப ராவ் (தந்தை)
வாழ்க்கைத்
துணை
விமலா
பிள்ளைகள்சுபாஷினி, சுஹாசினி
விருதுகள்கலைமாமணி விருது

வெ. இரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட மாருதி (28 ஆகத்து 1938 – 27 சூலை 2023), தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.[1] கண்மணி, பொன்மணி, விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது தந்துள்ளது‌.

வாழ்க்கை வரலாறு

இரங்கநாதன் புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28 அன்று டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர்கள் மராத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வெங்கோப ராவ் ஆசிரியராக பணி செய்தார். அதனால் வீட்டில் கிடைக்கும் சாக்பீஸைக் கொண்டு இரங்கநாதன் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார்.

இரங்கநாதன் புதுக்கோட்டையில் எஸ்.எஸ்.ல்.சி வரைப் படித்துள்ளார்.[1] புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.யூ.சி படிப்பில் சேர்ந்தார். ஆனால் ஓவியங்களின் மீதான ஆர்வம் காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டார். தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர்.

இவர் கே. மாதவன் என்ற ஓவியரை மானசீக குருவாக எண்ணி கற்றார்.[1] திரைப்படங்களுக்கு பேனர் வரையும் ஆசையில் 1959 மார்ச் 11 இல் சென்னைக்குச் சென்றார். மைலாப்பூரில் திரைப்படங்களுக்கு பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம், பெயர் எழுதும் பணி செய்தார். சென்னையில் ஆர். நடராஜன் என்ற ஓவியரிடம் நடிகர் சிவக்குமாரும், இரங்கநாதனும் ஓவியம் கற்றார்கள்.

புனைபெயர்

இரங்கநாதன் திரைப்படங்களுக்கு பேனர் உள்ளிட்டவற்றை வரையும் வேலை செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் நாளிதழ்களில் ஓவியம் வரையும் வாய்ப்பு பெற்றார். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வேலை செய்வதால் ஏற்படுகிற பிரட்சனையை தீர்க்க இதழ்களுக்கு ஓவியம் வரையும் பொழுது 'மாருதி' என கையொப்பம் இட்டார். அது அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகே உள்ள மாருதி பார்மசியிலிருந்து எடுக்கப்பட்டதென நேர்காணலில் கூறியுள்ளார்.

ஓவியம்

மாருதி என்ற பெயரில் இவரது முதல் ஓவியம் 20 ஏப்ரல் 1959 அன்று குமுதம் வார இதழில் வெளியானது.[2] அந்த இதழில் அய்யோ பாவம் என்ற தலைப்பிலான சிறுகதைக்காக ஓவியம் வரைந்திருந்தார்.

இவருக்கு தமிழக முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர் ஓவியப் பணிகளையும், வீடும் தந்தார்.[1] அதே போல மற்றொரு முன்னாள் முதல்வரான மு. கருணாநிதி, இராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவில் அவரது கடல்போர் உள்ளிட்ட சில படைப்புகளுக்கு ஓவியம் வரையும் வாய்ப்பு தந்துள்ளார்.[1]

ஆடை வடிவமைப்பு

மாருதி, உளியின் ஓசை (2008), பெண் சிங்கம் (2010) ஆகிய திரைப்படங்களுக்கும், வீர மங்கை வேலு நாச்சியார் என்ற ஓரங்க நாடகத்திற்கும் ஆடை வடிமைத்துள்ளார்.

விருதுகள்

ஓவியக் கலைமாமணி என்ற விருதினை புதுக்கோட்டை இலக்கியப் பேரவையினர் தந்தனர்.

தனி வாழ்க்கை

தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரைத் திருமணம் செய்தார் மாருதி. இவர்களுக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர்.[3]

மறைவு

மகாராட்டிர மாநிலம் புனே நகரில் தன் மகள் வீட்டில் தங்கியிருந்த மாருதி, தன் 85-ஆம் பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே 27 சூலை 2023 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நெஞ்சக நோயால் காலமானார்.[3][4]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 பாடலுக்கு இசை; எழுத்துக்கு ஓவியம்! நாள் ஜனவரி 05, 2017 தினமலர் நாளேடு
  2. நான்... ஓவியர் மாருதி - குமுதம் ஸ்பெஷல் - 03 ஜனவரி 2020
  3. 3.0 3.1 "பிரபல ஓவியர் மாருதி காலமானார்". Hindu Tamil Thisai. 2023-07-27. Retrieved 2023-07-27.
  4. "ஓவியர் மாருதி காலமானார்". Dinamani. Retrieved 2023-07-27.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மாருதி_(ஓவியர்)&oldid=465973" இலிருந்து மீள்விக்கப்பட்டது