1998 திக்குவல்லை கலவரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திக்குவல்லை கலவரம் மே 8, 1998ல் முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையே ஏற்பட்ட இனக்கலவரமாகும். இலங்கை, மாத்தறை மாவட்டத்தில் உள்ள திக்குவல்லை பிரதேசம் முஸ்லிம்கள் வாழும் ஒரு பிரதேசமாகும். இங்கு அவ்வப்போது சில பதற்ற நிலைகள் ஏற்பட்டுள்ளன.

பின்னணி

மே 8, 1998ல் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை நேரம் முஸ்லிம் வீடுகளிலுள்ள பெண்களை சில சிங்களவர்கள் பயமுறுத்திச் சென்றுள்ளனர். ஜும்ஆத் தொழுகை நேரத்தில் பெரும்பாலான ஆண்கள் தொழுகைக்காக பள்ளிவாயிலுக்குச் சென்றுவிடுவர். அச்சந்தர்ப்பத்தில் சில வீடுகளின் முன்பகுதிகளும் பாதை அகலப்படுத்தல் எனும் பெயரால் சிங்களவர்களால் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டன. ஜும்ஆத் தொழுகை முடிந்துவந்த முஸ்லிம்களுக்கும் பாதை அகலப்படுத்தல் என்ற பெயரில் அங்கு குழப்பம் விளைவிக்க முயன்ற குழுவினருக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. பெரஹரா செல்வதற்குப் பாதை அகாலப்படுத்தல் செய்யப்படவுள்ளதாக அங்கு நின்ற சிங்களக் குழுவினர் காரணம் காட்டி முஸ்லிம்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாதகக் கதைகள் ஒலிபரப்பு

மறுநாள் பள்ளிவாயிலுக்கு அருகாமையில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு உரத்த ஒலியில் பௌத்த சாதகக் கதைகள் ஒலிபரப்பப்பட்டன. இவ்விடயங்கள் தொடர்பாக அப்பகுதி மகாநாயக்க தேரரிடம் முஸ்லிம்கள் விசாரணை செய்தபோது பாதை விஸ்தரிப்பிற்கும், பெரஹெராவிற்கும் சம்பந்தமில்லை என்றும் ஒலிபெருக்கியில் சாதகக் கதைகள் ஒலிபரப்புச் செய்வது சம்பந்தமாகவும் தமது அனுமதி பெறப்படவில்லை என்றும் இவ்வாறு ஒரு போதும் இவர்களுக்கு அனுமதி தரவில்லை என்றும், மகாநாயக்க தேரர் கூறியுள்ளார். அவ்வொலிபெருக்கியை அங்கிருந்து அகற்றுவதற்கும் தேரர் ஏற்பாடுகளைச் செய்தார்.

வெசாக் தினத்தன்று கலவரம்

இப்பிரச்சினைகளில் சம்பந்தப்பட்டிருந்தவர்கள் வெசாக் தினத்தன்று இரவு திக்குவல்லை யோனக்கபுர முஸ்லிம் வீதியில் முஸ்லிம் ஒருவரின் வீட்டிலிருந்த பொருட்களை வெளியே வீசி எறிந்துள்ளார். இந்தப் பிரச்சினையை முஸ்லிம்கள் காவல்துறையிடம் முறையிட்டபோது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

உச்ச கட்டம்

இரண்டு தினங்களின் பின்னர் சில சிங்களவர்கள் குடிபோதையில் வந்து முஸ்லிம்களைத் தாக்கினர். அத்துடன் மின்ஹாஜ் வீதியிலுள்ள முஸ்லிம்களைக் கீழ்த்தரமான வார்த்தைகளால் ஏசியபோது அவர்களுக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்குமிடையில் வாக்குவாதமும், கல்வீச்சுக்களும் நடந்தன. அன்றிரவு 9.30 மணியளவில் அங்குவந்த ஆயுத பாணியான கும்பலொன்று முஸ்லிம்களைத் தாக்கினர்.

காவல் துறையினர் உதாசீனம்

திக்குவல்லை காவல்துறையினரிடம் மீண்டும் முறையிட்டபோது அவர்கள் பேசாதிருந்து விட்டனர். பின்னர் மாத்தறை காவல் துறையினருக்கு முறையிட்டு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டபோது அவர்களும் முஸ்லிம்களை அடித்துவிரட்டி விட்டனர்.

உசாத்துணை:

  • அனஸ் எம். எஸ். எம், அமீர்தீன். வீ, வஸீல் ஏ. ஜே. எல் - இலங்கையில் இனக்கலவரங்களும் முஸ்லிம்களும், மே 2003 ISBN 955-97264-2-0
  • புன்னியாமீன், சிறுபான்மைக்கு யார் பாதுகாப்பு?, நவமணி மே 24, 1998
  • தினகரன் மே 10 1998, மே 12 1998, மே 16 1998, மே 17 1998
"https://wiki1.tamilar.wiki/index.php?title=1998_திக்குவல்லை_கலவரம்&oldid=146948" இருந்து மீள்விக்கப்பட்டது