1 திமொத்தேயு (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Saint Timothy.jpg
தூய திமொத்தேயு. விவிலியப் படிமம். மரபுவழித் திருச்சபை முறை


1 திமொத்தேயு அல்லது திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம் (First Letter [Epistle] to Timothy)என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பதினைந்தாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் பத்தாவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Timotheon A (Επιστολή Προς Τιμόθεον Α) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula I ad Timotheum எனவும் உள்ளது [1].

ஆசிரியர்

திமொத்தேயுவுக்கு எழுதப்பட்ட இரண்டு திருமுகங்களும், தீத்துவுக்கு எழுதப்பட்ட திருமுகமும் ஆயர் பணித் திருமுகங்கள் என வழங்கப்பெறுகின்றன. ஆயர்களான திமொத்தேயுவுக்கும் தீத்துவுக்கும் ஆயர் பணி பற்றி எழுதப்பட்டுள்ளதால் இவை இவ்வாறு பெயர் பெறுகின்றன.

இவற்றைப் பவுலே நேரடியாக [2] எழுதினாரா என்பது பற்றி ஐயப்பாடு உள்ளது. இத்திருமுகங்களில் காணப்படும் சொற்கள், மொழி நடை, திருச்சபை அமைப்புமுறை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, இவற்றைப் பவுலே எழுதியிருப்பார் எனக் கூறுவது கடினமாய் இருக்கிறது. பவுலின் சிந்தனையில் வளர்ந்த அவருடைய சீடர்கள் திருமுகம் எழுதப்பட்ட காலகட்டத்தில் அவர் என்ன கூறியிருப்பார் என்பதை உணர்ந்து, அவர் பெயரால் இத்திருமுகங்களை எழுதியிருப்பார்கள் எனக் கருத இடமிருக்கிறது. இவ்வாறு எழுதுவது அக்காலத்தில் முறையானதாகக் கருதப்பட்டது. முதல் நூற்றாண்டின் இறுதியிலோ இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ இவை எழுதப்பட்டிருக்கலாம்.

எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்

பவுலுடைய உடன் உழைப்பாளர் திமொத்தேயு லிஸ்திராவைச் சேர்ந்தவர். தந்தை கிரேக்க மொழி பேசும் பிற இனத்தார், தாய் யூதக் கிறிஸ்தவர் (திப 16:1). பவுலின் மூலம் கிறிஸ்தவராகி, இரண்டாம் மூன்றாம் நற்செய்திப் பயணங்களில் உடன் பணியாளராய்த் திமொத்தேயு செயல்பட்டார் (திப 16:3; 19:22). முக்கிய பணிகளுக்குப் பல வேளைகளில் பவுல் அவரைத்தான் அனுப்பினார் (திப 19:2; 1 கொரி 4:17; 1 தெச 3:2). 1 திமொ 1:3இன்படி, திமொத்தேயு எபேசிய திருச்சபையின் கண்காணிப்பாளராய் (ஆயராய்) இருந்தார் எனத் தெரிகிறது.

பவுல் எபேசு சபையைக் கண்காணிக்குமாறு திமொத்தேயுவை ஏற்படுத்திய பின் (1 திமொ 1:3) மாசிதோனியா சென்றார். மீண்டும் தாம் எபேசுக்கு வரப்போவதில்லை என உணர்ந்த அவர், தாம் ஆயராக நியமித்த திமொத்தேயுவுக்கு அவர்தம் கடமைகளை நினைவுறுத்துவதற்காக இத்திருமுகத்தை எழுதியதாகப் பலர் கருதுகின்றனர்.

உள்ளடக்கம்

தவறான போதனைகளை எதிர்க்குமாறு இத்திருமுக ஆசிரியர் கூறுகிறார் (காண்க: 1 திமொ 1:3-7; 4:1-8; 6:3-5, 20-21). ஏனெனில் அக்காலத்தில் ஞான உணர்வுக்கொள்கை பரவத்தொடங்கியிருந்தது. உலகம் கெட்டது என்றும், ஒருவர் மீட்புப் பெற வேண்டுமென்றால் மறைவான அறிவு பெறவேண்டும் என்றும், பலவகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், திருமணம் புரியலாகாது என்றும் இக்கொள்கை கூறியது.

எபேசு திருச்சபையின் வழிபாடு, நிர்வாகம் ஆகியவற்றைச் செவ்வனே கவனிக்குமாறு திருமுக ஆசிரியர் பணிக்கிறார் (1 திமொ 2:1-15); தகுதியான தலைவர்களை நியமிக்குமாறும் அறிவுரை கூறுகிறார் (1 திமொ 3:1-13; 5:17-25)

வார்ப்புரு:பவுல் எழுதிய திருமுகங்கள்

சில பகுதிகள்

1 திமொத்தேயு 1:12-14

"எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன்.
ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார்.
முன்னர் நான் அவரை பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன்.
ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார்.
இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது."

1 திமொத்தேயு 2:4-7


"எல்லா மனிதரும் மீட்புப் பெறவும்
உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென கடவுள் விரும்புகிறார்.
ஏனெனில் கடவுள் ஒருவரே.
கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே.
அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்.
அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்;
குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார்.
இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும்
திருத்தூதனாகவும் விசுவாசத்தையும் உண்மையையும்
பிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன்.
நான் சொல்வது உண்மையே; பொய் அல்ல."

உட்பிரிவுகள்

பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை 1:1-2 392
2. நலமான போதனை 1:3-20 392 - 393
3. வழிபாடு, தலைமைப்பணி பற்றிய

அறிவுரைகள்

2:1 - 3:16 393 - 394
4. திமொத்தேயுவின் பணி பற்றிய

அறிவுரைகள்

4:1 - 6:19 394 - 398
5. இறுதிப் பரிந்துரையும் எச்சரிக்கையும் 6:20-21 398

மேற்கோள்கள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=1_திமொத்தேயு_(நூல்)&oldid=147003" இருந்து மீள்விக்கப்பட்டது