பெரியவரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பெரியவரி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்[1]
மகசூல்
எக்டேருக்கு சுமார் 1,500 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

பெரியவரி (Periyavari) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். தென்னிந்திய உணவு வகைகளான இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற இரகமாக உள்ள இதன் தானியம், தடித்தும் (மோட்டா இரகம்) அரிசி சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது.[1]

காலம்

குறுகிய கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 115 - 120 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. பின் சம்பா பருவத்தில் நடவு செய்யக்கூடிய இந்நெல் இரகம், நாற்றங்கால் வயது 24 நாட்களாக உள்ளது.[1]

சாகுபடி

நாற்று விட்டு நடவு முறையில் சாகுபடி செய்யப்படும் இது, மணல் கலந்த களிமண் போன்ற நிலங்களில் பயிரிட ஏற்றதாக கூறப்படுகிறது. இலை மற்றும் தண்டுப் பகுதிகள் கரும்புப் பயிரைப் ஒத்திருக்கும் இந்நெல் இரகம், முதிர்ந்த நிலையில் சாயகூடியது எனவும், மேலும் இதன் தண்டின் அளவு 2 சதமமீட்டர் இருப்பதால், கூரை வேய்வதற்கு உகந்தது எனவும் கூறப்படுகிறது.[1]

மகசூல்

சராசரியாக 128.5 சதமமீட்டர் உயரமும், அதிகபட்சமாக 131.6 சதமமீட்டர் உயரமும் வளரக்கூடிய இந்த இரக நெற்கதிர்களின் நீளம், 23.5 - 27.1 சதம மீட்டராகவும், நெற்கதிரில் உள்ள நெல்மணிகளின் எண்ணிக்கை 145 - 213 என கணக்கிடப்பட்டுள்ளது. நெல்லின் மகசூல் ஒரு எக்டேருக்கு சராசரியாக 1,400 கிலோவாகவும் (18.5 மூடைகள்), வைக்கோலின் மகசூல் 1,500 (50 கட்டுகள்) கிலோவாகவும் உற்பத்தித் திறன் கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]

நெல்மணியின் இயல்பு

பெரியவரியின் நெல்மணிகளின் இயல்பானது, பூக்கும் பருவத்தில் இளம் பச்சை நிறமாகவும், பால்பிடிக்கும் நேரத்தில் கரும்பச்சையாகவும், முதிர்ச்சிப் பருவத்தில் அடர் மஞ்சள் நிறத்தில் கருமை நிறக் கோடுகளுடன் காணப்படும்.[1]


சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "பாரம்பரிய நெல் இரகங்கள் - பக்கம் 70-71" (PDF). nammanellu.com (தமிழ்) - சனவரி 2001. Retrieved 2025-07-15.
"https://tamilar.wiki/w/index.php?title=பெரியவரி&oldid=448823" இலிருந்து மீள்விக்கப்பட்டது